காதலன் குடும்பத்தினர் கண்டிப்பு... படத்திலிருந்து விலகினார் நஸ்ரியா
திருவனந்தபுரம்: படங்களில் நடிக்க காதலன் பகத் பாசில் குடும்பத்தினர் திடீர் கண்டிப்பு காட்டியதால், ஒப்பந்தமான படத்திலிருந்து விலகினார் நஸ்ரியா.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளவர் நஸ்ரியா. தமிழில் 'நேரம்', 'ராஜா ராணி', 'நய்யாண்டி' படங்களில் நடித்துள்ளார். நய்யாண்டியில் இயக்குநருடன் மோதி பரபரப்பு கிளப்பினார்.
நஸ்ரியாவுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் காதல் ஏற்பட்டு, அது திருமணம் வரை வந்துவிட்டது.

நடிப்பு தொடரும்
இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நஸ்ரியா - பஹத் பாசில் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் நடந்தது. நஸ்ரியா சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று பஹத் பாசில் அறிவித்தார்.

திருமணம்
ஆகஸ்டு 24-ந்தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் ‘ஹாய் ஐ ஆம் டோனி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். மலையாள நடிகர் லால் தயாரிக்கும் இந்த படத்தில் அவரது மகன் ஜூனியர் லால் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை துவங்க ஏற்பாடுகள் நடந்தன.

திடீர் விலகல்
இந்த நிலையில் திடீரென்று அந்த படத்தில் இருந்து நஸ்ரியா விலகி விட்டார். அவருக்கு பதில் மியா என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கண்டிப்பு
நஸ்ரியா நடிப்பைத் தொடர முதலில் சம்மதித்த பஹத் பாசிலும் அவரது குடும்பத்தினரும், இப்போது சினிமாவில் நடிக்க கூடாது என தடை போட்டதாகவும், எனவேதான் படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிக்க ஆசை
ஆனால் நஸ்ரியா சமீபத்தில் சென்னையில் அளித்த பேட்டியில், எனக்கு நடிப்பைத் தொடரவே ஆசை. நல்ல பாத்திரங்கள், வாய்ப்புகளை விட்டுவிட மனசில்லை, என்று கூறியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











