ஓட்டுப்போட வராத ஜோதிகா.. மும்பை போனதும் மொத்தமா மாறிவிட்டார்.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ந் தேதி நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து வாக்களித்தனர். ஆனால், நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது தற்போது சர்ச்சையாகி பேசுபொருளாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடிகை ஜோதிகா எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் உருவான வாலி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சூர்யாவுடன் சேர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து, சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

காதல் திருமணம்: ஜோதிகாவின் முதல் படமான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்த போது, சூர்யா ஜோதிகா இருவரும் காதல் வயப்பட்ட நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி ஜோதிகா 36 வயதிலே படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜோதிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மும்பையில்: சூர்யா - ஜோதிகா இருவரும் திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அன்றுபோல் இன்றும் இளமை மாறாமல் காதலுடன் மகிழ்ச்சியான தம்பதிகளாக உள்ளனர். தற்போது ஜோதிகா, தமிழ் சினிமாவை தாண்டி, மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தன் கணவர் சூர்யாவுடன் இணைந்து படங்களைத் தயாரித்தும் வருகிறார். மேலும், குழந்தைகளின் படிப்புக்காக சூர்யா ஜோதிகா மும்பையில் செட்டிலான நிலையில், ஷைத்தான் என்ற இந்தி படத்தில் நடித்தார். இதில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படமும் நல்ல வசூலை பெற்ற்து. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

குடும்பத்தோடு வந்த சூர்யா: நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு சினிமா நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். அதில் சூர்யா அவரது தம்பி மற்றும் அப்பா சிவக்குமார் என குடும்பமாக வந்து வாக்களித்திருந்தார். ஆனால், ஜோதிகா வரவில்லை இதுகுறித்து அப்போதே செய்தியாளர்கள் ஜோதிகா மட்டும் ஏன் வரவில்லை என்று கேட்டனர். அதற்கு சூர்யா பதில் சொல்லாமல் அமைதியாக கடந்துவிட்டார்.

ஓட்டுபோட நேரமில்லையா: தற்போது ஜோதிகா நேபாளத்தில் தனது தோழியுடன் தனியாக ட்ரிப் சென்று இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள், ஓ இதற்காகத்தான் வாக்களிக்க வரவில்லையா? என்றும், சமூக சேவைகள் குறித்து பேசும் ஜோதிகா இப்படி ஜனநாயக கடமையை செய்ய தவறிவிட்டாரே என்றும், இதற்கு எல்லாம் நேரம் இருக்கு ஓட்டுபோட நேரம் இல்லையா என அவரை கடுமையாக திட்டிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











