துணை முதலமைச்சர் பட நடிகைக்கு அரசு வாகனமா?.. சுற்றி அடிக்க ஆரம்பித்த சர்ச்சை.. பதறிய நிதி அகர்வால் விளக்கம்
ஹைதராபாத்: ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துவருபவர் நிதி அகர்வால். தமிழில் அவர் சிம்புவுடன் ஈஸ்வரன், உதயநிதி ஸ்டாலினுடன் கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தெலுங்கில் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க விழா ஒன்றுக்கு அவர் அரசு வாகனத்தில் சென்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு விளக்கமளித்திருக்கிறார்.
ஆந்திராவை சேர்ந்த நிதி அகர்வால் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முன்னா மைக்கேல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அத்தோடு பாலிவுட்டுக்கு மூட்டை கட்டிய அவர் தெலுங்கில் கவனம் செலுத்தினார். அங்கு வரிசையாக சவ்யசாச்சி, மிஸ்டர் மஞ்சு, ஐ ஸ்மார்ட் ஷங்கர் படங்களில் நடித்தார். இம்மூன்றும் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தாலும் நிதி அகர்வாலுக்கு நிதி கொட்டுவதற்கு வாய்ப்பாக மார்க்கெட் உயர்ந்தது.
தமிழில் அறிமுகம்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் சிம்பு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய படமான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டுக்கு வந்தார் நிதி. அப்படம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து பூமி, கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தப் படங்களும் பெரிய வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவருக்கு தெலுங்கில் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

சிம்புவுடன் கிசுகிசு: ஈஸ்வரன் படத்தில் நடித்தபோது நிதி அகர்வாலுக்கும், சிம்புவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிவிட்டது. விரைவில் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற தகவல்கள் வட்டமடித்தன. ஆனால் அது வதந்தி என்று பின்னர் உறுதியாது. இப்படி வதந்திகள், சினிமா வாய்ப்புகள் என சென்றுகொண்டிருக்கும் நிதி அகர்வால் பயணத்தில் புதிய சர்ச்சை முளைத்தது.
என்ன நடந்தது?: அதாவது விஜயவாடாவில் ஒரு கடை திறப்பு விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள சென்ற நிதி அகர்வால்; அரசுக்கு சொந்தமான வாகனத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதுதொடர்பான வீடியோ வெளியாகி எப்படி அரசுக்கு சொந்தமான வண்டியில் வரலாம் என்று சர்ச்சையையும், கேள்வியையும் எழுப்பியது. இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக ஆரம்பித்தது. இந்நிலையில் நிதி அகர்வால் விளக்கம் அளித்திருக்கிறார்.
நிதி அகர்வாலின் விளக்கம்: அவர் அளித்திருக்கும் விளக்கத்தில், "பீமாவரத்தில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நான் சென்றது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் பரவிவரும் சில விஷயங்களை பற்றி விளக்குவதற்கு விரும்புகிறேன். விழா ஏற்பாட்டாளர்கள்தான் எனக்கு அந்த வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த வாகனத்தை அரசு அதிகாரிகள் அனுப்பினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதுவும் ஆதாரமற்றது" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











