கவலையை தூக்கி ஓரம் வைங்க.. காசு முக்கியமா மாறிடுச்சு.. ஜான்வி கபூர் விவகாரத்தில் நித்யா மேனன் பளிச்
சென்னை: சென்னை: சினிமா உலகம் எவ்வளவோ மாறினாலும், பெண்களுக்குத் திரையில் இன்னும் போதிய மரியாதை கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அரிதாகிப் போன இந்தச் சூழலில், பெரும்பாலான படங்களில் நடிகைகள் வெறும் அலங்கார பொம்மைகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'பெத்தி' (Peddi) படத்தின் கிளாமர் விவகாரம் ஒட்டுமொத்த திரைத்துறையையும் உலுக்கியுள்ளது. நடிகை ஜான்வி கபூரின் உடல் அமைப்பை மட்டுமே குறிவைத்து, இயக்குநர் புச்சி பாபு சனா காட்சிகளை அமைத்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் பறக்கின்றன. அதுமட்டுமில்லாமல், 'ரெகமெண்டேஷன் கம்யூனிட்டி' பக்கத்தின் சர்ச்சைக்குரிய பதிவை ஜான்வி கபூர் லைக் செய்ய, விவகாரம் மேலும் பூதாகரமானது.
திரண்டு எழுந்த திரையுலகம்: திரைத்துறையில் நிலவும் இந்த மோசமான போக்கிற்கு எதிராகப் பாடகி சுமங்கலி, நடிகைகள் ஆஷிகா ரங்கநாத், டிம்பிள் ஹயாதி எனப் பலரும் குரல் கொடுத்து, படக்குழுவினரை வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், எப்போதும் போல் போல்டான கேரக்டருக்கு பெயர் போன நடிகை நித்யா மேனன், இந்த விவகாரத்தில் தன் ஆதங்கத்தை அப்படியே கொட்டித் தீர்த்துள்ளார்.

'வெரைட்டி இந்தியா' ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தென்னிந்தியாவில் மட்டும் இந்த அநீதி நடக்கவில்லை; ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே இந்தத் தப்பான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறது" என்று கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.
கலைக்கு பலி கொடுக்கப்படும் கண்ணியம்: "இன்றைய தயாரிப்பாளர்களுக்கு கலை முக்கியமில்லை, கல்லா கட்டுவது (பணம்) மட்டும் தான் முக்கியம். மக்களை எப்படியாவது தியேட்டருக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக ஆபாசத்தை ஒரு தந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள். தேவையற்ற 'ஐட்டம்' பாடல்களைப் படங்களுக்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார்கள். வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இத்தகைய கேவலமான வேலைகளைச் செய்கிறார்கள்" என்று நித்யா மேனன் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
நடிகைகளுக்கு நித்யா கொடுத்த அட்வைஸ்: தயாரிப்பாளர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டுத் தலையாட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், "நடிகைகள் தங்களுக்கு எனச் சொந்தமாக எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். தவறான மற்றும் அநாகரீகமான காட்சிகளைத் தயங்காமல் மறுக்க பழக வேண்டும். தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பெண்கள் துணிந்து குரல் கொடுக்க வேண்டும்" என்று அட்வைஸ் செய்துள்ளார்.

என் கொள்கையை காற்றில் பறக்க விட மாட்டேன்: "கண்ணியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க நான் விரும்புகிறேன். எல்லை மீறிய கவர்ச்சி மற்றும் ஆபாசக் காட்சிகளில் நான் எப்போதும் நடிக்க மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் மற்றும் சமூகப் பொறுப்பு" என்று மிகத் தெளிவாகவும் கறாராகவும் கூறி, இந்த கிளாமர் கலாச்சாரத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளார் நித்யா மேனன். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications