ஜன நாயகன் பகவந்த் கேசரி ரீமேக்கா?.. பராசக்தி ஹீரோயின் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க.. சரியான ஆள்!
சென்னை: தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சினிமா வட்டாரத்தில் இருந்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தளபதி கச்சேரி பாடலில் மமிதா பைஜு கழுத்தில் போட்டுள்ள மணி கூட அப்படியே பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீலீலா போட்டிருந்தது தான் என ரசிகர்கள் டிகோட் செய்து கண்டு பிடித்துள்ளனர்.
ஆனாலும், இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னதாக விஜய் நடித்த லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் ரீமேக் என்பதும் படம் வெளியாவதற்கு முன்பே கசிந்தாலும், கடைசி வரை படக்குழு அதை ரகசியமாக காத்து வந்து கடைசியில், லியோவை எல்சியூவுடனும் முடிச்சுப் போட்டது.

ப்ரண்ட்ஸ், கில்லி, போக்கிரி, காவலன் என ஏகப்பட்ட ரீமேக் படங்களில் விஜய் நடித்துள்ள நிலையில், அவரது கடைசி படமும் ரீமேக் படமாகவே இருக்கும் என்கின்றனர். இந்நிலையில், பகவந்த் கேசரி படத்தில் பாலகிருஷ்ணாவின் வளர்ப்பு மகளாக நடித்த ஸ்ரீலீலா நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், ஜன நாயகன் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பராசக்தி பட ஹீரோயின்: தெலுங்கு சினிமாவில் பகவந்த் கேசரி, புஷ்பா 2, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர் காரம் என ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ரீலீலா தற்போது தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை குறிவைத்து பராசக்தி படம் வெளியாகவுள்ள நிலையில், ஸ்ரீலீலாவை சுதா கொங்கரா ஹீரோயினாக தேர்வு செய்துள்ளார்.

பகவந்த் கேசரி ரீமேக்கா?: அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா மற்றும் அர்ஜுன் ராம்பால் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பகவந்த் கேசரி திரைப்படம் கமர்ஷியல் வெற்றியை பெற்றது. மேலும், பாலகிருஷ்ணாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அந்த படத்தில் ஸ்ரீலீலா தான் முக்கிய கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணாவின் வளர்ப்பு மகளாக நடித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட நேச்சுரல்ஸ் ஷோ ரூம் திறப்பு விழாவுக்கு வந்த ஸ்ரீலீலாவிடம் ஜன நாயகன் பகவந்த் கேசரி ரீமேக்கா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க என பதில் அளித்துவிட்டார்.
விஜய் ரசிகை: ஆனால், அதே சமயம் தான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்றும் கண்டிப்பாக ஜன நாயகன் படத்தை பார்க்க ரொம்பவே ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும், பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல உள்ளது. படம் ரொம்பவே நல்லா வந்திருக்கு, கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என பராசக்தி பட ஹீரோயின் ஸ்ரீலீலா செம க்யூட்டாக பேசியுள்ளார். தமிழ், தெலுங்கை தொடர்ந்து அடுத்ததாக இந்தியிலும் 2 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











