போயஸ்வாசியான நயன்தாரா.. புது வீட்டில் நடத்தப்பட்ட ஃபோட்டோஷூட்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர் சிம்புவை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்த அவருக்கு அந்தக் காதலும் கைகூடவில்லை. பிரபுதேவாவை காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக கூறி கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்: அந்தக் காதல் முறிவுக்கு பிறகு நானும் ரௌடிதான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினார்கள். முதலில் அரசல் புரசலாக அந்தச் செய்தி வெளிவர தொடங்கியது. மேலும் அதில் உண்மை இருக்காது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு விக்னேஷ் சிவனும், நயனும் ஒன்றாக கலந்துகொள்ள ஆரம்பித்ததை அடுத்து அவர்களது காதல் உறுதியானது.
திருமணம்: இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு பேரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நயன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் அவர் ஜவான், இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்திருந்தார். இவற்றில் ஜவான் படம் மட்டும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டெஸ்ட் என்ற படமும், மண்ணாங்கட்டி படமும் வெளியாகவிருக்கின்றன. மலையாளத்திலும் டியர் ஸ்டூடண்ட் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
நயனின் பிஸ்னெஸ்: நடிப்பில் மட்டுமின்றி வேறு தொழிலும் ஆர்வம் காட்டுபவர் நயன்தாரா. அண்மையில் 9 ஸ்கின் என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும், சானிடரி நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கினார் நயன். அதுமட்டுமின்றி கேரளாவில் பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டி வாடகைக்கு விடும் எண்ணத்திலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் இப்போது சென்னை எக்மோரில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்துவருகிறார்.
புதிய வீடு: சூழல் இப்படி இருக்க அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டியிருக்கிறார். ரஜினிகாந்த், தனுஷ் போன்றோர் அந்த ஏரியாவில்தான் வசிக்கிறார்கள். இந்நிலையில் தான் கட்டியிருக்கும் வீட்டுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள், நயனும் போயஸ்வாசியா ஆகிட்டாங்களே என்று கமெண்ட்ஸ் செய்து புகைப்படங்களை ட்ரெண்டாக்கிவருகின்றனர். முன்னதாக தன்னுடைய படத்தின் புரோமோஷனிலேயே கலந்துகொள்ளாத நயன்; விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நேசிப்பாயா பட விழாவில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











