மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி இருக்கியேம்மா.. ரெட்ரோவில் ‘ருக்கு’வாக வாழ்ந்த பூஜா ஹெக்டே!
சென்னை: சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்கள் நமக்கு பொழுதுபோக்காகவும் , ஒரு சில கதாபாத்திரங்கள் பிரமிப்பையும் ஏற்படுத்தும். ஆனால், ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே 'ருக்கு' எனும் ருக்மணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் நெஞ்சில் சிறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கார்த்திக் சுப்புராஜ் படங்களில் எப்போதுமே பெண் கதாபாத்திரங்கள் வலிமையானதாகவும் புதுமையானதாகவும் எழுதப்பட்டு திரையில் உருவாக்கப்பட்டு இருக்கும். இறைவி படமெல்லாம் பெண்களுக்காகவே அவர் இயக்கியிருந்தார். ரெட்ரோவில் அவர் உருவாக்கிய 'ருக்கு' கதாபாத்திரம் தான் உண்மையில் ரசிகர்களுக்கு அந்த டைட்டில் 'ரெட்ரோ'வுக்கான அர்த்தத்தையே கொடுத்தது.

ஜானி படத்தில் இடம்பெற்ற "செனோரிட்டா" பாடலுக்கு சூர்யாவையும் பூஜா ஹெக்டேவையும் நடனமாட விட்டு ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றிருப்பார். கால் அழகியாக கவர்ச்சி பதுமையாக புட்டபொம்மாவாகவும் ஹலமிதி ஹபிபோவாகவும் ஆட்டம் போட்டு வந்த பூஜா ஹெக்டே ராதே ஷ்யாம் படத்துக்குப் பிறகு ரெட்ரோவில் தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த ருக்கு: முதல் காட்சியிலிருந்தே பூஜா ஹெக்டே ஒரு நடிகையாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது போல் இல்லாமல் நமக்கு தெரிந்த ஒருவரைப் போல் உணர வைக்கும் வகையிலும், அடுத்த வீட்டுப் பெண் போல நம்மை கவர்கிறார். ருக்கு கதாபாத்திரம் இப்படத்தில் அதிகம் பேசுவதில்லை, ஆனால் அவரது மௌனங்களின் மூலம் முழு உணர்ச்சிகளின் அளவைக் காட்டுகிறார். இந்த நடிப்பை தனித்து நிற்க வைப்பது அதன் எளிமை மட்டுமல்ல, அதன் ஆழமும் கூட. வலி, நம்பிக்கை, காதல் போன்றவற்றை அவரது கண்கள் வெளிப்படுத்துகின்றன. பூஜாவால் உயிர்ப்பிக்கப்பட்ட ருக்கு கதாபாத்திரம் "வலிமையில் மென்மை" என்பதன் காட்சி உருவமாகிறது .

நடிப்பில் நல்ல முன்னேற்றம்: பூஜாவின் இந்த கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் தனித்துவமான வகையிலும்,ஆழமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். தற்போது சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பூஜா ஹெக்டே கதாபாத்திர காட்சிகள் மற்றும் கனிமா பாடல் நடனம் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் .மேலும் இவரது அடுத்த படங்களான ஜன நாயகன், கூலி, காஞ்சனா 4 போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர் .
ஜன நாயகனுக்கு வெயிட்டிங்: தமிழில் பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர், பல ஆண்டுகள் கழித்து பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் பூஜா ஹெக்டே மீண்டும் ஜோடியாக இணைந்துள்ள நிலையில், ரசிகர்கள் அந்த படத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.
கூலியில் குத்தாட்டம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிப்பதும் பலருக்கும் பெருங்கனவாக உள்ள நிலையில், இரண்டுமே பூஜா ஹெக்டேவுக்கு கூலி படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. அனிருத் இசையில் கூலி படத்தில் பூஜா ஹெக்டே போட்டுள்ள குத்தாட்டத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க என ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கு எஸ்கேப் ஆகித்தான் லோகேஷ் சில காலம் சோஷியல் மீடியாவுக்கே லீவு விட்டுள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











