ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4.. ஹீரோயின் யார் தெரியுமா?.. அட சும்மா பத்திக்குமே
சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் காஞ்சனா 4 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

நடிகர், இயக்குநர்: இதனையடுத்து பல படங்களில் நடன அமைப்பாளராக மாஸ் காட்டினார். அதுமட்டுமின்றி அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ஜிகர்தண்டா 2 வெளியானது. அடுத்ததாக பென்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
உதவி: லாரன்ஸ் நடிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். பல சிறுவர்களின் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருவது என பலரது பாராட்டை பெற்றிருக்கிறார். சிறுவயது முதல் தான் படிக்க வைத்து இப்போது டிகிரி முடித்திருக்கும் இளைஞரை அறிமுகப்படுத்தி சில மாதங்களுக்கு முன்புகூட வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாற்றம் என்ற அமைப்பையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.
காஞ்சனா 4: லாரன்ஸுக்கு இந்திய அளவில் பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால் அது காஞ்சனா பட சீரிஸ்தான். காமெடி, கிளாமர், பேய் என கலந்துகட்டி அந்த வரிசை படங்களை கொடுத்தார். முதல் இரண்டு பாகங்கள் நன்றாக போனாலும் மூன்றாவது பாகம் சோடை போனது. இதன் காரணமாக காஞ்சனா சீரிஸ் மீது ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பு தட்டியது என்பதுதான் உண்மை. இருந்தாலும் மூன்றாம் பாகத்தில் விட்டதை அடுத்த பாகத்தில் பிடிக்க முடிவு செய்திருக்கிறார் லாரன்ஸ்.

பூஜா ஹெக்டே ஹீரோயின்: அதன்படி காஞ்சனா படத்தின் நான்காம் பாக பணிகளை விரைவில் தொடங்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் அந்தப் படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவை கமிட் செய்திருக்கிறார்கள் என்றும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. முகமூடி படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே பல வருடங்கள் கழித்து பீஸ்ட் படத்தில் நடித்தார். அந்தப் படமும் தோல்வியடைந்தது.
இப்போது சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் சூர்யா 44 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து காஞ்சனா 4லும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுவதால்; நிச்சயம் பூஜா ஹெக்டே தமிழில் ஒரு ரவுண்டு வர ஆர்மபிப்பார். அதற்கான தொடக்க புள்ளியாக இந்தப் படங்கள் அமைய வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்களும், திரைத்துறையினரும் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











