அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதாங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிகா.மும்பையை பூர்வீகமாகக் கொண்ட அவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொண்டு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் ஹிந்தியில் சைத்தான் படத்தில் நடித்தார். தற்போது அவர் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜோதிகா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். சிம்ரனுக்கு போட்டியாக தனது கொடியையும் கோடம்பாக்கத்தில் பறக்கவிட்டார். துறு துறு நடிப்பு, பப்லியான உருவம் என தமிழ் ரசிகர்களை தனது அழகு மற்றும் நடிப்பால் கட்டிப்போட்டவர் அவர். ஜோதிகா முதலில் திரையில் தோன்றியது எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில். அந்தப் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் சோனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி நடிகை: வாலி படத்துக்கு பிறகு வசந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் இருவரும் இணைந்த நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படமும் ஹிட்டாக தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஜோதிகாவுக்கு குவிந்தன. 90களின் இறுதியிலும், 2000த்தின் ஆரம்பத்திலும் ஜோதிகா முன்னணி நடிகையாக மாறினார். அவருக்கு போட்டியாக சிம்ரனும் வர, சிம்ரன் - ஜோதிகா என்ற போட்டி உருவானது. இருவருமே சரிசமமாக ஹிட் படங்களை கொடுத்தனர்.
சிறந்த நடிகை ஜோதிகா: ஹீரோவுடன் டூயட், கிளாமர் என்ற ரூட்டில் மட்டும் பயணிக்காத ஜோதிகா சிறந்த கதையம்சம் உள்ள படங்களிலும் அவர் நடித்தார். அப்படி அவர் நடித்த மொழி படம் அவரின் கேரியரில் முக்கியமான ஒன்று. வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேபோல் சந்திரமுகி படத்திலும் அவரது நடிப்பு அனைவரையும் மெர்சலாக்கியது.
நடிப்புக்கு ஓய்வு டூ ரீ என்ட்ரி: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து சூர்யாவும், ஜோதிகாவும் காதலிக்கத் தொடங்கினர். இரு வீட்டு சம்மதத்தையும் பெறுவதற்கு இரண்டு பேரும் பல வருடங்கள் காத்திருந்தனர். ஒருவழியாக வீட்டார் சம்மதம் கிடைத்தவுடன் கடந்த 2006ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார் ஜோதிகா. பிறகு 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து நடித்துவருகிறார். கடைசியாக சைத்தான் படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து கவனம்: ஜோதிகா ஹிந்தி படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அங்குதான் இப்போது சூர்யாவும் குழந்தைகளும் இருக்கிறார்கள். சூர்யாவும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சிவக்குமாருடன் சண்டைப்போட்டுவிட்டுத்தான் ஜோதிகாவும், சூர்யாவும் மும்பைக்கு சென்றுவிட்டார்கள் என்று இடையில் ஒரு வதந்தி வேறு பரவியது. அதனை ஜோதிகா திட்டவட்டமாக மறுத்தார்.
ஜோதிகா பேட்டி: இந்நிலையில் நடிகை ஜோதிகா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது முதல் படம் குறித்து அவர் பேசுகையில், "ப்ரியதர்ஷன் இயக்கிய டோலி சஜாகே ரக்னா என்ற ஹிந்தி படத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு நடித்தேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. அந்த சமயத்தில் இயக்குநர் வசந்த் வந்து என்னை சூர்யாவின் ஜோடியாக நடிக்க கமிட் செய்தார். நான் முதலில் கமிட்டான படம் பூவெல்லாம் கேட்டுப்பார். ஆனால் வாலி திரைப்படம் முதலில் ரிலீஸாகிவிட்டது. அப்போது எனக்கு 17 வயதுதான்" என்றார். இதன் மூலம் பூவெல்லாம் கேட்டுப்பார் படம்தான் ஜோதிகாவின் முதல் படம் என்பது ஆணித்தரமாக நிரூபனமாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











