Priyamani - எனக்கு எந்தவித தடையுமில்லை.. அவரால்தான் அதெல்லாம் செய்ய முடிகிறது.. மனம் திறந்த பிரியாமணி
சென்னை: நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக மலையாளத்தில் வெளியான நேரு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பிரியாமணிக்கு நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்தன. அதனையடுத்து பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே பாரதிராஜா, பாலுமகேந்திரா என இரண்டு பெரும் ஆளுமைகளின் இயக்கத்தில் நடித்ததால் திரையுலகில் வெகுவாக கவனம் ஈர்த்தார் ப்ரியாமணி.

தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்தார். முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். கார்த்தியிடம் காதலில் கசிந்துருகுவதும், காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த பிறகு யாருக்கும் அஞ்சாமல் இருப்பதும் என ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு ராட்சசியாக மிரட்டியிருந்தார். குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
குறைந்த வாய்ப்புகள்: பருத்திவீரனில் தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒன்றிரண்டு படங்களின் வாய்ப்பே அமைந்தது. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக முஸ்தஃப் என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
நேரு: திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவர் கடைசியாக ஜவான் மற்றும் நேரு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நேரு படத்தில் பெண் வழக்கறிஞர் கதாபாத்திரத்தையும், ஜவான் படத்தில் ஷாருக்கான் டீமில் இருக்கும் ஒரு ஆக்ஷன் வுமன் கதாபாத்திரத்தையும் ஏற்று கலக்கியிருந்தார். இந்நிலையில் அவர் தனது கணவர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பிரியாமணி பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நடிகைகளுக்கு திருமணம் நடந்துவிட்டால் முன்பெல்லாம் ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள். திருமணமான நடிகை என்றாலே அவர் கதாநாயகியாக நடிக்க தகுதி இல்லை என்ற எண்ணம்தான் நிலவிவந்தது. அதுமட்டுமின்றி திருமணமான நடிகைகள் அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க கவனம் செலுத்திவிடுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை.
பிசி நடிகை: இப்போது திருமணம் செய்து கொண்ட நடிகைகளும் பிசியாக இருக்கிறார்கள். முன்பு போல் எல்லாம் இப்போது இல்லை. எனது கணவரால்தான் இன்னும் என்னால் நடிகையாக வர முடிகிறது. எனக்கு வரும் பட வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அவரிடம் பேசுவேன். நான் சினிமாவில் நடிப்பதற்கு எனது கணவர் எந்தவிதமான தடையையும் விதிப்பதில்லை என்பதுதான் உண்ம" என்றார்.


Click it and Unblock the Notifications











