காட்டு மல்லி விவகாரம்: நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர்கள் புகார்
காட்டு மல்லி படத்தில் நடிக்க மறுப்பதாகக் கூறி நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் இன்று முன்னணி நடிகையாகத் திகழ்பவர் ஸ்ரீதிவ்யா. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ஜீவா படமும் பாராட்டுக்களைப் பெற்றதால், கணிசமான சம்பளம் பெறுகிறார்.

தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஈட்டி படத்திலும் நடிக்கிறார்.
இப்படங்களுக்கு முன்பு நகர்ப்புறம், காட்டு மல்லி என இரு படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படங்கள் நின்று போயின.
ஸ்ரீதிவ்யாவின் இப்போதைய மார்க்கெட் மதிப்பை வைத்து, மீண்டும் அவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்த அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யா கால்ஷீட் தர மறுக்கிறாராம். கைவசம் ஆறு படங்கள் இருப்பது ஒரு காரணம். அடுத்து சம்பளம். இந்த இரு படங்களுக்கும் சில ஆயிரங்கள்தான் சம்பளம் பேசியிருந்தார்களாம். இப்போது கிட்டத்தட்ட அரைகோடியை நெருங்குகிறது ஸ்ரீதிவ்யா சம்பளம்.
எனவே கால்ஷீட் தர முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தர முடிவெடுத்துள்ளனர்.
அவர்கள் என்ன புகார் தருவது, நானே நடிகர் சங்கத்தில் புகார் தரப் போகிறேன் என்று ஸ்ரீதிவ்யாவும் கூறி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











