ஒரு ஏ குறைச்சுட்டு.. இரண்டு ஏ சேத்தோம்னா.. ஆஹான்னு வாழ்க்கை.. ஓஹோன்னு பேரு!
சென்னை : சினிமாவிற்காக தங்களின் உண்மையான பெயர்களை மாற்றிக் கொண்ட நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். இன்னும் சில பேர் எளிதில் சொல்லக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பெயர் மாற்றி உள்ளனர்.
ஆனால் சமீப காலமாக நடிகைகள் பலர் தங்களின் பெயர்களிலும், அதன் எழுத்துக்களிலும் மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிர்ஷ்டத்திற்காக தான் இந்த மாற்றம் என அவர்கள் சொன்னாலும், வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்றே அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
அப்படி அதிர்ஷ்டத்திற்காக பெயரில் மாற்றம் செய்த நடிகைகள் சிலரையும், அவர்கள் செய்த மாற்றம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

ஐ சேர்த்த ராஷி கண்ணா
தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர். அதன் பின்னர் அடங்க மறு, அயோக்கியா, சங்கத் தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் அவரது குழுவினர் வெளியிட்ட செய்தி குறிப்பில் ராஷியின் பெயரில் கூடுதலாக ஒரு ஐ (raashi khanna - raashii khanna) என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டத்திற்காக இந்த ஐ என்றும், வேறு குறிப்பிடும்படியான காரணம் ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டது.

இரண்டெழுத்து சேர்த்த தமன்னா
சில ஆண்டுகளுக்கு முன் தமன்னாவும் தனது பெயரில் கூடுதலாக ஒரு ஏ மற்றும் ஹெச் எழுத்துக்களை (tamanna - tamannaah) சேர்த்தார். நியூமராலஜி நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பெயரை இப்படி மாற்றிதாக அவர் கூறினார். தனது பெயரில் உள்ள எழுத்துக்களை மாற்றிய பிறகு அவர் நடித்த படங்கள் பல ஹிட் ஆனதால் பயங்கர குஷியானார் தமன்னா.

ஹெச் பதில் ஐ சேர்த்த பார்வதி நாயர்
பார்வதி நாயர் தனது பெயரில் இருந்த ஹெச் என்ற எழுத்தை நீக்கி விட்டு, அதற்கு பதில் கூடுதலாக ஒரு ஐ (parvathi nair - parvatii nair )சேர்த்துள்ளார். இது பற்றி பேட்டி ஒன்றில் கூறிய அவர், இதில் அதிர்ஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை. சில குழப்பங்களை தவிர்க்கவே இந்த மாற்றம். எனக்கு நியூமராலஜியில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஆனால் சிறு வயதில் இருந்தே எனது பெயரால் சில பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். எனது பெயரை ஒவ்வொருவரும் ஒரு விதமாக எழுதுகிறார்கள். இந்த குழப்பத்தை தவிர்க்க இந்த எழுத்து மாற்றம் செய்தேன் என்றார்.

பல மாற்றம் செய்த ராய் லட்சுமி
ராய் லட்சுமியின் உண்மையான பெயர் லட்சுமி ராய். தற்போது பெயரை ராய் லட்சுமி என மாற்றியதுடன், ராய் என்பதில் கூடுதலாக ஒரு ஏ சேர்த்ததுடன், லட்சுமி என்ற பெயரில் இருக்கும் எழுத்துக்களையும் (lakshmi rai - raai laxmi) மாற்றி உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், மக்கள் என்னை ராாய் அல்லது லட்சுமி ராய் என்றே அழைக்கிறார்கள். நீண்ட காலமாக எனது அப்பா சொன்னதால் எனது பெர்சனாலிட்டி வளர்ச்சிக்காக மாற்றினேன். தற்போது அது தானாக நடந்துள்ளது. எனது அனைத்து படங்களிலும் ராய் லட்சுமி என்றே போடப்படும் என்றார்.

ஏ சேர்த்த சுனைனா
சுனைனாவும் சமீபத்தில் தனது பெயரில் கூடுதலாக ஒரு ஏ (sunaina - sunainaa) சேர்த்துக் கொண்டுள்ளார். ஆனால் இது பற்றி அவர் விளக்கம் ஏதும் சொல்லவில்லை. இருந்தாலும் அதிர்ஷ்டத்திற்காகவே இந்த மாற்றம் என கூறப்படுகிறது. இந்த பெயர் மாற்றத்திற்கு பிறகு அவர் நடித்த சில்லு கருப்பட்டி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











