ரஜினிகாந்த் நடித்திருக்க வேண்டிய படம் தாய் கிழவி.. அவருக்கு பதில் நான் நடித்திருக்கிறேன்.. ராதிகா ஓபன் டாக்
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்திருக்கும் படம் தாய் கிழவி. இதில் இளவரசு, சிங்கம்புலி, அருள்தாஸ் என பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். வரும் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது படம். இந்நிலையில் நேற்று சென்னையில் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடந்தது. அதில் ராதிகா பேசியிருக்கும் ஒரு விஷயத்தை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவர் ராதிகா. 70களில் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி 80களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர். தொடர்ந்து 90களில் ஆரம்பித்து இப்போதுவரை குணசித்திர நடிப்பில் அமர்க்களப்படுத்திவருகிறார். தர்மதுரை, நானும் ரௌடிதான் உள்ளிட்ட பல படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் அனைவரிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்னமும் அவருக்கு ஒரு தேசிய விருதுகூட கிடைக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது

தாய் கிழவியில் கிடைக்கும்: சூழல் இப்படி இருக்க சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தற்போது தாய் கிழவி படத்தில் நடித்திருக்கிறார். முதலில் 20ஆம் தேதி வெளியாகவிருந்த படம் சில காரணங்களால் 27ஆம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் உள்ளிட்டோர் படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்தார்கள். அப்போது படத்தையும், இயக்குநரையும் வெகுவாக பாராட்டினார் கமல். மேலும் ட்ரெய்லர், க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படத்துக்காக அவர் தேசிய விருது பெறுவார் என நம்பப்படுகிறது.
தாய் கிழவி ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடந்தது. இதில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய ராதிகா, "ஒரு படத்தின் ஷூட்டிங்கில் சூரியிடம், 'சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஆளாக வருவார்' என சொன்னேன். அதே மாதிரி நடந்துவிட்டது. அவர் நல்ல மனிதராக வளர்ந்திருக்கிறார். இயக்குநர் சிவக்குமார் முருகேசன் ஒரு திறமைவாய்ந்த இயக்குநர். அவரை கண்டுபிடித்த சிவகார்த்திகேயனுக்கு என்னுடைய வாழ்த்துகள். இயக்குநர் சிவக்குமார் தேவையான ஷாட் வரும்வரை விடவே மாட்டார். பார்க்கத்தான் அமைதியாக இருப்பார். உள்ளுக்குள் பெரிய ஃபயர் இருக்கிறது.
ரஜினி நடித்திருக்க வேண்டிய படம்: மூன்று நாட்களுக்கு முன்பு கமலோடு இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம். அவர் இந்த வேடம் ஏற்று நடிக்கமாட்டார். அதை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் நான் இந்தப் படத்தை பார்க்கிறேன். என்ன ஒரு மாஸ். இந்த தாய் கிழவியை ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.
அவ்வளவு வலி: இந்தப் படம் நடிக்கும்போது கால் உடைந்துவிட்டது. அவ்வளவு வலியோடு நடித்தேன். ஒரு ஷூட்டிங் என்னால் நின்றுவிடக்கூடாது என நடித்தேன். ஏனெனில் தயாரிப்பாளரின் கஷ்டம் எனக்கு தெரியும். இதற்கெல்லாம் ஹீரோ சிவக்குமார் முருகேசன் மட்டும்தான். என்னுடைய கரியரில் நான் பார்க்காத இயக்குநர்கள் இல்லை. கே.பாலசந்தர் தவிர்த்து அனைத்து இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துவிட்டேன். சிவக்குமாருடன் இருக்கும் நபர்களும் பயங்கர டேலண்ட்டாக இருக்கிறார்கள். இந்தப் படம்தான் அவருக்கு முதல் அடி. இனிமேல் பார்த்து கால் வையுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications















