ரஜினியுடன் நடித்துவிட்டேன்.. நான் அதிர்ஷ்டசாலி! - தீபிகா படுகோன்
ரஜினியின் ராணா படத்தில் நாயகியாக ஒப்பந்தமானவர் தீபிகா படுகோன். அந்தப் படத்துக்காக ரஜினியுடன் ஒரு பாடல் காட்சியிலும் நடித்தார்.
ஆனால் அந்தப் படம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. ரஜினி அடுத்து நடிக்க ஆரம்பித்த 3 டி மோஷன் கேப்சரிங் படமான கோச்சடையானிலும் தீபிகாவே நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ரஜினியுடன் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
கோச்சடையானில் பணியாற்றியது குறித்து தீபிகா கூறுகையில், "நிச்சயமாக நான் ஒரு அதிர்ஷ்டசாலிதான். இதுவரை எங்கும் யாரிடத்திலும் பார்த்திராத எளிமையும் இனிமையும் அன்பும் நிறைந்த சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு பெற்ற நான் அதிர்ஷ்டசாலிதானே...
தன் தொழிலை இந்த அளவு நேசிக்கிற ஒரு மனிதரை நான் எங்கும் பார்த்ததில்லை. ரஜினியைப் பற்றி பலரும் பலவிதமாக புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். அவரைச் சந்தித்தால்தான் அவை அத்தனையும் மிகையில்லாத உண்மை என்பது புரிய வரும். ஒரு பெரிய கனவு நனவான மாதிரி இருக்கிறது, நான் சினிமாவுக்கு வந்ததையும் ரஜினியுடன் நடித்தையும் நினைக்கும்போது," என்றார்.
ராணா பற்றிக் கேட்டபோது, "கோச்சடையான்தான் இப்போதைக்கு நான் நடிக்கும் ஒரே தமிழ்ப் படம். ஆனால் ராணா தொடங்கும்போது, எனது அனைத்து கமிட்மெண்டுகளையும் சரி செய்து கொண்டாவது நடிக்க வந்துவிடுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications












