இதுல வெட்கப்பட என்ன இருக்கு? மன நலப்பிரச்னைக்கு நானும் சிகிச்சை எடுத்தேன்.. தனுஷ் ஹீரோயின் தகவல்!
சென்னை: மன நல பிரச்னைக்கு தானும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என்றும் இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்றும் தனுஷ் பட ஹீரோயின் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன். ஜார்ஜேட்டன் பூரன், ஒரு சினிமாகாரன், ஜூன், பைனல்ஸ், ஸ்டாண்ட் அப் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களும் நடித்துள்ள இவர், தமிழில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

திருநெல்வேலி ஷூட்டிங்
தனுஷ் ஹீரோவாக நடிக்கும் கர்ணன் படத்தில், இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். திருநெல்வேலியில் வேகமாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக தடைபட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங்
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையை கொண்ட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர். இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மன ஆரோக்கியம்
இதையடுத்து சினிமாவில் மன அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. நடிகர், நடிகைகள் இதுபற்றி இப்போது பேசி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாசன், 'இந்த லாக்டவுனில் மன ஆரோக்கியம்தான் மக்களின் உண்மையான பிரச்னை என்று கருதுகிறேன். அவர்கள் இந்த விஷயம் பற்றிப் பேச வெட்கப்படுகிறார்கள். நான் கடந்த மூன்று வருடங்களாக இதற்கானச் சிகிச்சையில் இருக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

மருத்துவமனை
நடிகை பாயல் கோஷ், தானும் மன அழுத்தத்துக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். 'கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் பிரச்னை, மரண பயம். எதை கண்டாலும் பீதி. எப்போதெல்லாம் இறந்துவிடுவேன் என்று உணர்கிறேனோ, அப்போதெல்லாம் மருத்துவமனைக்கு ஓடிவிடுவேன் என்று கூறியிருந்தார்.

வெட்கப்பட ஒன்றுமில்லை
இந்நிலையில் நடிகை ரஷிஜா விஜயன், தானும் சிகிச்சை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, எனக்கும் இந்தப் பிரச்னை இருந்தது. சிகிச்சை எடுத்துக்கொண்டேன். உங்களுக்கும் தேவைப்பட்டால் மனநல மருத்துவரை சந்தியுங்கள். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. நமது மனமும், நம் உடலின் ஒரு பகுதிதான். மற்ற பகுதியை போலவே நோய் வாய்ப்படும்போது இதற்கும் சிகிச்சை தேவை' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











