Rakul Preet Singh: திருமணத்திற்கு ரெடியான ரகுல் ப்ரீத் சிங்.. ஆனால் அதுக்கெல்லாம் நோ சொல்லிட்டாராமே
சென்னை: பான் இந்தியா நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் திருமணம் நாளை மறுநாள் (பிப்.21) நடைபெறவுள்ளது. தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதல் திருமணம் செய்யவுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். கோவாவில் நடைபெறவுள்ள இவர்களது திருமணத்திற்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், சிலவற்றிற்கு மட்டும் ரகுல் ப்ரீத் சிங் தடை போட்டுள்ளாராம்.

திருமணத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் எடுத்த முடிவு
கன்னடத்தில் 2009ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமான அவர், தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க மூலம் என்ட்ரி கொடுத்தார். தமிழில் தொடர்ந்து என்னமோ ஏதோ, கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாராம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் NGK ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்திய ரகுல் ப்ரீத் சிங், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அயலானில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். அதேபோல் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்து மேலும் பல தமிழ்ப் படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார்.
கடந்த சில வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங். இருவரும் அடிக்கடி ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் டேட்டிங் செல்வதும் வழக்கமாக இருந்தது. ஜக்கி பக்னானியை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
அதன்படி ராகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி திருமணம் வரும் 21ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் கோவாவில் குவிந்துள்ளனர். இந்த திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் சில கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
அதாவது தனது திருமணத்தை பசுமை வழியில் நடத்த முடிவு செய்துள்ளாராம். அதன்படி, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில் பசுமையாக நடத்தவிருக்கிறாராம். இதற்காக அழைப்பிதழை கூட டிஜிட்டல் முறையில் ரெடி செய்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அதேபோல் பட்டாசு, ஒலிப்பெருக்கி ஆகியவை பயன்படுத்த வேண்டாம் எனவும் மணமக்கள் முடிவு செய்துள்ளனர். சொல்லில் மட்டும் இருந்துவிடாமல் அதனை செயல்படுத்த தனியாக ஒரு குழுவை ஏற்பாடு செய்துள்ளாராம் ரகுல் ப்ரீத் சிங். அவரது இந்த முடிவுக்கு ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











