அருணாச்சலம் படப்பிடிப்பில் நடந்த விஷயம்.. ரஜினிகாந்த் அதையெல்லாம் கண்டுக்க மாட்டார்.. ரம்பா நறுக்!
சென்னை: ’அழகிய லைலா’ என திடீரென தென்னிந்திய ரசிகர்கள் நிகிலா விமலை கொண்டாடி வந்தாலும் நிஜமான 'அழகிய லைலா’வான ரம்பாவை ரசிகர்கள் எந்த காலத்திலும் மறந்து விட மாட்டார்கள். வெளிநாட்டில் வசித்து வந்த நடிகை ரம்பா மீண்டும் சென்னைக்கு குடியேறி இருக்கும் நிலையில், மீண்டும் படங்களில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
நடிகை ரம்பாவின் மகளும் ரம்பாவை போல அழகாக உள்ள நிலையில், அவரை சினிமாவில் நடிக்க வைக்கப் போகிறாரா ரம்பா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரம்பா அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினிகாந்த் தனது முதுகில் தட்டியதாக சொன்ன விஷயத்தை சோஷியல் மீடியாவில் ரஜினிகாந்த் ஹேட்டர்கள் தவறாக சித்தரித்து பெரிய பஞ்சாயத்தை கிளப்பியிருந்தனர். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ரம்பா அளித்துள்ள புதிய பேட்டி அமைந்துள்ளது.
ரஜினிகாந்த் படத்தில் ரம்பா: சுந்தர். சி இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிகை ரம்பா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர். சிக்கு கிடைத்தது. 1997ம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படத்தில் செளந்தர்யா ஹீரோயினாக நடித்த நிலையில், 2வது ஹீரோயினாக ரம்பா அந்த படத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் உடன் இணைந்து “அல்லி அல்லி அனார்க்கலி” பாடலிலும் அவர் நடனமாடியுள்ளார்.

ரம்பா விளக்கம்: அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பின் போது லைட் ஆஃப் பண்ணிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது முதுகில் தட்டினார் என ரம்பா பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் உடன் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கும் போது, நான் சொல்லியிருந்தேன். ஆனால், அதை ரஜினிகாந்த் பின்னாடி தட்டி விட்டார் என தப்பான நோக்கத்தில் திரித்து நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர் என நடிகை ரம்பா தற்போது அளித்துள்ள புதிய பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.
கொஞ்சமாவது வளருங்க: இதே விஷயத்தை அந்த படம் வெளியான போது கூட நான் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறேன். ஆனால், அப்போது இருந்த ரசிகர்கள் அதை காமெடியாக மட்டுமே கண்டு ரசித்தனர். ஆனால், இப்போது இளைஞர்களிடம் அதிகப்படியான நெகட்டிவிட்டி பெருகி இருக்கிறது. தப்பான கண்ணோட்டத்துடனே அனைத்தையும் அணுகுகின்றனர். அவர்கள் போட்ட கமெண்ட்டுகளை பார்த்து எனக்கே கஷ்டமாகி விட்டது. கொஞ்சமாவது வளருங்க என்று தான் சொல்லத் தோன்றுகிறது எனக் கூறியுள்ளார் ரம்பா.

ரஜினி சார் கண்டுக்கமாட்டார்: இந்த விவகாரம் ரஜினி சாருக்கு தெரிந்திருக்குமா என தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அவர் இதையெல்லாம் பெரிதாக கண்டுக்க மாட்டார். அவருக்கு நான் எப்படி பேசினேன் என்பது புரியும். தேவையில்லாமல், சோஷியல் மீடியாவில் உள்ளவர்கள் தான் இதனை ஊதிப் பெரிதாக்கி விட்டனர் என ரம்பா கூறியுள்ளார். மீனா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்தது போல மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்பா நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











