சாய்ஸ் மட்டும் இருந்திருந்தால் படையப்பாவில் அந்த ரோல் செஞ்சிருப்பேன்.. ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்
சென்னை: கோலிவுட்டின் சீனியர் நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். முதலில் ஹீரோயினாக கலக்கியவர் இப்போது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் ரசிகர்களால் நீலாம்பரி, ராஜமாதா என்று அழைக்கப்படுபவர். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் படையப்பா படம் குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முக்கியமான மற்றும் மூத்த நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். பத்திரிகையாளர், கதையாசிரியர், நடிகர் என பன்முகங்கள் கொண்ட சோவின் உறவினரான ரம்யா பல வருடங்களாக நடித்துவருகிறார். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தார். கிளாமர், ஹோம்லி என எந்த கேரக்டராக இருந்தாலும் அடித்து தூள் கிளப்பும் வல்லமை கொண்டவர் அவர்.
குணசித்திர கதாபாத்திரம்: ஒருகட்டத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. அதனையடுத்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் அவர். ஹீரோயினாக எப்படி கலக்கினாரோ கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அவர் அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.கேரக்டர் ரோல் மட்டுமின்றி வில்லியாகவும் மிரட்டலான ஆக்டிங்கை அசால்ட்டாக கொடுத்தவர்.

நீலாம்பரி: அவர் ஏற்றதிலேயே காலத்துக்கு அழிக்க முடியாத கதாபாத்திரம் என்றால் படையப்பா படத்தில் அவர் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம். ரஜினி என்ற பெரிய ஆளுமைக்கு வில்லியாக நடித்து அதகளம் செய்திருந்தார். ரஜினியேகூட அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து வியந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார். படையப்பா படத்தில் நடித்ததிலிருந்து ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது.
மரகதவள்ளி: அதேபோல் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் மற்றொரு சிறப்பான கதாபாத்திரம் என்றால் பஞ்ச தந்திரம் படத்தில் அவர் ஏற்றிருந்த மரகதவள்ளி (மேகி) கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்திலும் படு காமெடியாகவும், கொஞ்சம் கிளாமராகவும் நடித்து அசத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். குறிப்பாக வந்தேன் வந்தேன் பாடலில் சிம்ரனுக்கு போட்டியாக நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜமாதா: இப்படி பல கதாபாத்திரங்களில் கலக்கிய ரம்யா கிருஷ்ணனை இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்த்த படம் பாகுபலி. அந்தப் படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று தனது குரலாலும், நடிப்பாலும் அதகளம் செய்தார். அந்தப் படம் வெளியானதிலிருந்து ரம்யா கிருஷ்ணனை ரசிகர்கள் எங்கள் ராஜமாதாவே என்றுதான் அழைத்து வருகிறார்கள்.இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சாய்ஸ் இருந்திருந்தால்: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சில வருடங்கள் முன்பு அவர் அளித்த பேட்டியில், "படையப்பா படத்தில் எனக்கு சாய்ஸ் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக சௌந்தர்யா செய்திருந்த ரோலைத்தான் செய்திருப்பேன். ஏனெனில் ரஜினிக்கு வில்லியாக நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள். படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட் செய்யும்போதெல்லாம் ஸ்பாட்டில் இருந்தவர்கள் நீங்கள் கொஞ்ச நாட்கள் சென்னைக்கு வராமல் இருங்கள் என்று சொன்னார்கள். அதேபோல் ரிலீஸின்போது நான் சென்னையில் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











