'பெரிய நடிகர்களுடன்...' - ரம்யா நம்பீஸன் ஆசை!

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், குள்ளநரி கூட்டம். இந்த படத்தில், அவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். ஆசிஷ் ஜெயின் தயாரித்துள்ள இந்த படத்தை, ஸ்ரீபாலாஜி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை குறுந்தகட்டை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டு வாழ்த்தினார்.
படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸுக்குத் தயாராக உள்ள இந்தப் படத்தின் அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "குள்ளநரி கூட்டம் படத்தை நான் முழுமையாக பார்த்து விட்டேன். இந்த படத்தில் நட்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. அப்பா-மகன், அம்மா-மகன் இடையேயான பாசம் இருக்கிறது.
சின்ன பட்ஜெட்டில் தயாராகும் இந்த மாதிரியான நல்ல படங்கள் வருவது, அபூர்வமாகவே இருக்கிறது. இதுபோல் நிறைய படங்கள் வரவேண்டும். என்னால் முடிந்த அளவு இந்தப் படத்தை ப்ரமோட் செய்வேன்,'' என்றார்.
படத்தின் கதாநாயகி ரம்யா நம்பீசன் கூறுகையில், "தமிழில் நான் நடித்து வெளிவந்த முதல் படம், 'ராமன் தேடிய சீதை.' அதையடுத்து, ஆட்ட நாயகன்,' 'இளைஞன்' ஆகிய படங்கள் வந்தன. இதுவரை நான் ஜோடியாக நடித்த கதாநாயகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார்களும் அல்ல. பெரிய கதாநாயகர்களும் அல்ல.
பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடியாக நான் நடிக்க வேண்டும்.
மலையாள படங்களில், நான் சொந்த குரலில் பாடிவிட்டேன். அதேபோல் தமிழ் படங்களிலும் சொந்த குரலில் பாட ஆசைப்படுகிறேன். நல்ல வாய்ப்பு வந்தால், சொந்த குரலில் பாடுவேன்,'' என்றார்.
நடிகர் விஷ்ணு, தயாரிப்பாளர் ஆசிஷ் ஜெயின், இயக்குநர் பாலாஜி, பாடல் ஆசிரியர் கவிஞர் இளங்கோ, இசையமைப்பாளர் செல்வகணேஷ், படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன் ஆகியோரும் பேசினார்கள்.
நிகழ்ச்சியை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.


Click it and Unblock the Notifications











