அந்த மாதிரி சீன்ல நடிக்க சாமி கும்பிடுவேன்.. மனசுக்குள் பயமா இருக்கும்.. ரம்யா பாண்டியன் பேட்டி!
சென்னை: நடிகர் அருள்நிதி சிறப்புத் தோற்றத்தில் நடித்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'அருள்வான்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கணேஷ் விநாயகன் இயக்கத்தில் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய் மற்றும் பேபி கிருத்திகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் நடிகை ரம்யா பாண்டியன் பேசினார்.
நடிகை ரம்யா பாண்டியன்: அதில், ரொமான்டிக்கான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றாலே எனக்குள் பயம் வந்துவிடும்; ரொம்பவே நர்வஸ் ஆகிவிடுவேன். எவ்வளவு அழுகின்ற காட்சியாக இருந்தாலும் சரி, ரோட்டில் உருண்டு பிரளும் காட்சியாக இருந்தாலும் சரி, காட்டுக்குள் நடக்கும் சீனாக இருந்தாலும் சரி... எதற்குமே நான் யோசிக்கவே மாட்டேன். எனக்கு பயமும் இருக்காது. ஆனால், ரொமான்டிக் சீன், இன்டிமேட் காட்சிகளில் நடிக்கும் போது மட்டும் என் மனதிற்குள் பயம் வந்துவிடும். அந்த பயம் வெளியே தெரியக்கூடாது, நல்லபடியாக நடித்து முடிக்க வேண்டும் என்பதற்காக நான் சாமி எல்லாம் கும்பிடுவேன். ஆனால், அதுவும் நமது தொழிலில் ஒரு பகுதிதான். நாம் எந்த வேலைக்குச் சென்றாலும், அதில் நமக்கு ஏதேனும் ஒரு விஷயம் பிடிக்காமல் இருக்கும்.

சுயமரியாதை முக்கியம்: சினிமா மட்டுமல்ல, நீங்கள் எந்த வேலைக்குச் சென்றாலும் அதில் பிடிக்காத ஒரு விஷயம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஒரு சிறிய விஷயத்திற்காக ஒட்டுமொத்த வேலையையும் வேண்டாம் என்று நாம் விட்டுவிட்டு ஓடிவந்துவிட முடியாது. அதை எப்படி நாம் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும், அதில். எப்படி முன்னேற வேண்டும் என்பதை நாம் தான் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். அதற்காக நம்முடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் செய்யும் வேலைகளில் ஈகோவை காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த விஷயம் நமக்கு வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு கதையில் இயக்குனர்சொல்லும் போதே, உங்களுக்கே நன்றாகப் புரியும். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் தயங்காமல் 'நோ' சொல்லிவிடலாம். வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களுக்கு 'எஸ்' சொல்கிறோமோ, அதே போல வேண்டாம் என்ற இடத்தில் உறுதியாக 'நோ' சொல்ல வேண்டும் என ரம்யா பாண்டியன் பேசி உள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் கார்த்திக் ராஜூடன் இணைந்து முகிலன் என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். அந்த தொடரில் ரம்யா, படுக்கை அறை காட்சி, காதல் காட்சி என அதிரடியான பல காட்சிகளில் கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications