அன்று வந்த அதே நிலா.. இன்றும் குறையாத பொலிவுடன்!
கொச்சி: அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக... அந்த ராசாத்தி ரஞ்சனி மறுபடியும் புதுப் பொலிவுடன், பல வருட இடைவெளிக்குப் பிறகு களம் இறங்குகிறார்.. இங்கல்ல, மலையாளத்தில்.
முதல் மரியாதையில் அறிமுகமாகி, பொடி நடையாக பல படங்களில் நடித்த ரஞ்சினி திடீரென ஒரு நல்ல நாளில் காணாமல் போனார்.
பல வருட குடும்ப வாழ்க்கைக்குப் பின்னர் மீண்டும் அவர் திரும்பி வருகிறார். மலையாளப் படத்தில் மறுபடியும் தலை காட்டவுள்ள அவர் 20 வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ளார்.
மோகன்லாலுக்கு ஜோடியாக அவர் நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் கூத்தரா. ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார்.

ஏற்கனவே பலமுறை
ஏற்கனவே மோகன்லாலுடன், சித்திரம், முகுந்தேட்டா சுமித்ரா விளிக்குன்னு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தவர் ரஞ்சனி.

மறு வருகையில் உற்சாகம்
தற்போது மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சியில் உள்ளாராம் ரஞ்சனி.

அதே பொலிவு.. அதே அழகு...
முதல் மரியாதையில் பார்த்த அதே ரஞ்சனியாக சற்றே பூசிய உடல் வாகுடன் அம்சமாக, அதே அழகுடன் இருக்கிறார் ரஞ்சனி.

சிங்கப்பூரிலிருந்து
இதுகாலம் வரை சிங்கப்பூரில் ரஞ்சனி வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் மட்டும் நடிப்பதற்காக இந்தியா வருகிறாரா அல்லது குடும்பத்தோடு இடம் பெயர்ந்து வருகிறாரா என்பது தெரியவில்லை.

தமிழுக்கும் வருவாரா..
தமிழில் முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், மண்ணுக்குள் வைரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார் ரஞ்சனி.

பெயர் சொன்ன படங்கள்
இதில் முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் என பாரதிராஜாவின் இயக்கத்தில் இவர் தொடர்நது நடித்த படங்கள் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தன.

கவர்ச்சியே இல்லாமல் கலக்கியவர்
ஆடை அவிழ்த்தும், குறைத்தும் கவர்ச்சி காட்டாமலேயே நல்ல நடிகை என்ற பெயரை வாங்கியவர் ரஞ்சனி என்பது அவரது சாதனைதான்...


Click it and Unblock the Notifications











