எனக்காக சமையல் முதல் ஊட்டிவிடுவதுவரை.. கணவர் விஜய் தேவரகொண்டாவை கொண்டாடும் ராஷ்மிகா மந்தனா
சென்னை: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் கடந்த மாதம் உதய்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. அதற்கு பிறகு ஹைதராபாத்தில் நடந்த ரிசப்ஷனில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இப்போது ஹனிமூனில் புதுமண ஜோடி இருப்பதாக தெரிகிறது. அவர்கள் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தங்களது தேனிலவை கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
நேஷனல் க்ரஷ் என்று கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தான்; தனது திரையுலக பயணத்தின் ஆரம்பத்தில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியை காதலித்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த நிச்சயதார்த்தம் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லவில்லை. தொடர்ந்து தன்னுடைய கரியரில் மட்டும் தீவிரமான கவனம் செலுத்திவந்த ராஷ்மிகா; விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இரண்டு பேருக்கும் திருமணம்: அவர்களின் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து; கடந்த வருடத்தில் சிம்ப்பிளாக ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்கள். அதில் உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்தை முடித்துக்கொண்டு ஹைதராபாத்தில் ரிசப்ஷனை வைத்தார்கள். அதில் திரையுலகத்தை சேர்ந்த பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
சூப்பர் விஷயம் செய்த ஜோடி: திருமணம், ரிசப்ஷனை முடித்துவிட்டு தனது சொந்த ஊருக்கு மனைவி ராஷ்மிகாவை அழைத்து சென்றார் விஜய். அப்போது ஊர் மக்களின் அன்பில் நனைந்த அவர்கள்; அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார்கள். அதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் திருமணத்தை முடித்துவிட்டு தங்களது வேலைகளை பார்ப்பவர்களுக்கு மத்தியில்; சொந்த ஊரை மறக்காத இவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹனிமூனில் பிஸி: அதுமட்டுமின்றி சமீபத்தில்கூட சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து தடல்புடலாக விருந்தும் வைத்தார்கள். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்த அவர்கள்; தங்களது அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு ஹனிமூனுக்கு பறந்திருக்கிறார்கள். தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தேனிலவை ஜாலியாக கொண்டாடிவருகிறார்கள். அவ்வப்போது அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாவில் ராஷ்மிகா பகிர்வதும்; அது வைரலாவதும் வாடிக்கையாகியிருக்கிறது.
புதிய போஸ்ட்: இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய வீடியோ ஒன்றை வைத்திருக்கிறார் புதுப்பெண் ராஷ்மிகா மந்தனா. அந்த வீடியோவில் ராஷ்மிகாவுக்கு கேக்கை ஊட்டிவிட்டுவிட்டு தானும் சாப்பிடுகிறார் தேவரகொண்டா. அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, "எனக்காக சமைப்பதிலிருந்து தொடங்கி ஊட்டிவிடுவது வரை" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இதே அன்பு, ஒற்றுமையுடன் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள்.


Click it and Unblock the Notifications















