ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது.. குவியும் வாழ்த்து.. வாழ்க்கையில் இணைந்த ஜோடி
உதய்பூர்: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்துவந்தார்கள். அவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் பிரமாண்ட மாளிகையில் அவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கும் அங்கே சூப்பராக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்துவருகிறார்கள்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து அவர்களுக்கு கடந்த வருடத்தில் ஹைதராபாத்தில் வைத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் தேதி திருமணமானது உதய்பூரில் வைத்து நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு பேரும் சந்தோஷத்துடன் அதை உறுதியும் செய்தார்கள்.

திருமண ஏற்பாடுகள்: திருமணம் உறுதியானதும் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக தொடங்கின. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் ஐடிசி மாளிகையில்தான் அவர்களது திருமணம் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆரவல்லி மலைத்தொடர்கள் மத்தியில் பார்க்கவே ரம்யமாக அந்த மாளிகை காட்சியளிக்கும். மேலும் ஒரு நாள் வாடகையே அதிகபட்சம் 91,000 என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது திருமணத்துக்கு அவர்கள் VIROSH திருமணம் என பெயர் வைத்திருந்தார்கள்.
திருமணத்தில் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்: இத்திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் என மணமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ மூன்றாவது நபர்கள் மூலம் லீக்காகிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அந்த ரூலை தங்களது திருமணத்தில் போட்டிருந்தார்கள். மேலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து 100 பவுன்சர்களையும் அவர்கள் களமிறக்கியிருந்தார்கள்.
நடந்து முடிந்த திருமணம்: இப்படி ஏகப்பட்ட விஷயங்களை அவர்கள் பார்த்து பார்த்து செய்திருந்தார்கள். கடந்த 24ஆம் தேதி ஹல்தி மற்றும் மெஹந்தி கொண்டாட்டமும், நேற்று சங்கீத் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குடும்பத்தினர் உற்சாகத்தோடு இருந்தார்கள். இந்நிலையில் இன்று ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தின்போது இரண்டு பேரின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு அவர்களை ஆசீர்வதித்தார்கள். மேலும் இருவரின் ரசிகர்களும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்துவருகிறார்கள்
ரிசப்ஷன்: திருமணம் முடிந்திருக்கும் சூழலில் இன்று மாலை நான்கு மணிக்கு கொடவா மரபுகள்படி மீண்டும் திருமண நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. தொடர்ந்து மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடக்கிறது. அதில் இந்திய திரைத்துறையிலிருந்து எக்கச்சக்க பேர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இவை அனைத்தையும் முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஹனிமூனுக்கு அவர்கள் பிளான் செய்திருக்கிறார்கள்.
மோடி வாழ்த்து: முன்னதாக இவர்களது திருமணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தனது வாழ்த்தில், "ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணத்துக்கு அழைக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தருணத்தில் இரண்டு பேரின் குடும்பத்துக்கும் வாழ்த்துகள். விஜய் மற்றும் ராஷ்மிகா அவர்களது வாழ்க்கையில் புதிய மற்றும் அழகான அத்தியாயத்தை தொடங்குகிறார்கள். இது அவர்களது வாழ்க்கையில் ஒரு தெய்வீக கதையின் அத்தியாயம். வெள்ளித்திரையில் அவர்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை விஞ்சும் என நம்புகிறேன். சிந்தனையுடனும், அன்புடனும் இரண்டு பேரும் அவர்கள் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளட்டும். தம்பதியினருக்கு எனது வாழ்த்தும், ஆசீர்வாதமும்" என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications















