தக் லைஃப் முத்த மழை.. திரிஷாவுக்கு ரோபோ சங்கர் மகள் எவ்வளவோ பரவாயில்லையாம்.. ரசிகர்கள் கலாய்
சென்னை: கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவும் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது; மேலும் சமீபத்தில்தான் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
நடிகர் ரோபோ சங்கர் மாரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே சின்னத்திரையிலேயே அவரை பலரும் ரசித்தார்கள். அதன் தொடர்ச்சியாக வெள்ளித்திரையிலும் அவரை மக்கள் ரசிக்கவே செய்கிறார்கள். மாரி படத்துக்கு பிறகு எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் என தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ சங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார்.
மகள் இந்திரஜாவும் நடிகைதான்: ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவரும் தனது தந்தை வழியில் நடிக்க வந்திருக்கிறார். அந்தவகையில் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில், முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் நடித்த அவர்வசம் இப்போதும் கொஞ்சம் படங்கள் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் முடிந்தது.

ஆண் குழந்தை பெற்றெடுத்த இந்திரஜா: அண்மையில்தான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால் ரோபோ சங்கர் குடும்பமே பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறது. அதுமட்டுமின்றி பிறந்த குழந்தைக்கு தன்னுடைய தாய் பாலில் இருந்து இந்திரஜா மோதிரம் ஒன்றை செய்து தன்னுடைய மகனுக்கு போட்டிருக்கிறார். அது பலரையும் கவர்ந்திருந்தது. தற்போது தன்னுடைய குழந்தையை வளர்ப்பதில் பிஸியாக இருக்கிறார் அவர்.
இந்திரஜாவின் வீடியோ: இந்நிலையில் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலுக்கு தனது முக பாவனைகளை கொடுத்த வீடியோவைத்தான் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பாடலுக்கு ஏற்றவாறு தனது எக்ஸ்பிரெஷன்களை கொடுத்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அட செமயா எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுத்திருக்கிறாரே என்று சொல்லி அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.
முத்த மழை: முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலை அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியதிலிருந்து பலருக்கு தேசிய கீதம் ஆனது அந்தப் பாடல். தீ பாடிய வெர்ஷனைவிடவும் சின்மயி பாடியதுதான் அவ்வளவு பொருத்தமாக இருந்தது என்று அனைவருமே கொண்டாட ஆரம்பித்தார்கள். இது ஒருபக்கம் இருக்க படத்தில் அந்தப் பாடலையே முதலில் மணிரத்னம் வைக்கவில்லை.
திரிஷாவை கலாய்த்த ரசிகர்கள்: சூழல் இப்படி இருக்க படம் ரிலீஸாக சில நாட்களுக்கு பிறகு அந்தப் பாடலின் வீடியோவை வெளியிட்டது படக்குழு. அதனைப் பார்த்த ரசிகர்களோ, 'அய்யய்யோ இவ்வளவு அழகான பாடலை மணிரத்னம் இப்படி கெடுத்து வைத்திருக்கிறாரே; திரிஷாவுக்கு முகத்தில் எக்ஸ்பிரெஷன்களும் இல்லை; தீயின் குரலும் செட் ஆகவில்லை' என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள். அதேபோல் இப்போது இந்திரஜாவின் வீடியோவை பார்த்த அவர்கள் திரிஷாவுக்கு இந்திரஜா எவ்வளவோ பரவாயில்லை என்று கமெண்ட்ஸ் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











