Rukmini Vasanth: எங்க உடம்மை ஜூம் பண்ணி பார்ப்பதை நிறுத்துங்க.. பப்பாரஸிக்கு எதிராக கன்னட நடிகைகள் போர்க்கொடி
பெங்களூரு: திரைத்துறையில் தற்போது நடிகைகளின் கண்ணியம் மற்றும் சில ஊடகங்களின் எல்லை மீறிய செயல்பாடு குறித்துப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. குறிப்பாக, பொது நிகழ்வுகளில் நடிகைகளைப் படம்பிடிக்கும் விதம் குறித்துக் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகைகள் எழுப்பியுள்ள குரல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகப் பாலிவுட் திரையுலகில் மட்டுமே காணப்பட்ட 'பாப்பராஸி' கலாச்சாரம், தற்போது தென்னிந்தியத் திரையுலகிலும் ஊடுருவியுள்ளது. இசை வெளியீட்டு விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகைகளைப் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். இதில் ஒரு சில நபர்கள், நடிகைகளின் உடல் பாகங்களை வேண்டுமென்றே 'ஜூம்' செய்தும், அநாகரீகமான கோணங்களிலும் படம்பிடித்து, அந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த அநாகரீகச் செயலுக்கு எதிராக நடிகைகள் சப்தமி கௌடா, ஆஷிகா ரங்கநாத், மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் ஒன்றிணைந்து தங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து முதலில் குரல் கொடுத்த நடிகை ருக்மிணி வசந்த், "பொது நிகழ்வுகளில் நடிகைகளின் உடல் பாகங்களை உள்நோக்கத்துடன் ஜூம் செய்து வீடியோ எடுப்பது அருவருப்பானது. இது ஒரு பெண்ணின் கௌரவத்திற்குப் கலங்கம் விளைவிக்கும் செயல். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவமானம்: இவரைத் தொடர்ந்து 'காந்தாரா' புகழ் சப்தமி கௌடா கூறுகையில், "நாங்கள் எங்கள் கலையை மக்களிடம் கொண்டு செல்லவே மேடையில் நிற்கிறோம். ஆனால், எங்கள் உடலை முன்னிலைப்படுத்தும் வகையில் கேமரா கோணங்களை அமைப்பது அவமானகரமானது. இதுபோன்ற அநாகரீகச் செயல்களை இனி சகித்துக்கொள்ள மாட்டோம்" என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

உடம்பை பார்க்காதீங்க: அதேபோல், நடிகை ஆஷிகா ரங்கநாத்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "எங்கள் வேலையைப் பாருங்கள், உடலை அல்ல. ஊடகப் பிரதிநிதிகள் தொழில் தர்மத்துடன் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். இது ஒவ்வொரு நடிகையும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்பதால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகைகளின் இந்தத் துணிச்சலான முடிவு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், இதுபோன்ற வீடியோக்களைப் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் நிலவும் இந்த வக்கிரமான கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











