என் வாழ்க்கைக்கு உயிர் தந்தவர் ஜானகி அம்மா.. இரங்கல் குறிப்பில் கண்கலங்க வைத்த 90ஸ் நடிகை
சென்னை: பழம்பெரும் மூத்த பாடகி ஜானகி அம்மாள் மறைவுச் செய்தி மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இப்படி இருக்கையில், மறைந்த பாடகி எஸ். ஜானகி அம்மாவுக்கு நன்றி சொல்லி இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை விந்தியா தனது திரை வாழ்க்கையில் ஜானகி அம்மாவின் குரலால் பாடப்பட்ட பாடல் எந்த அளவுக்கு மாற்றத்தை உருவாக்கியது என்பதை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜானகி அம்மா குறித்து நடிகை விந்தியா குறிப்பிடுகையில், " மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா" என்ற சங்கமம் பட வெற்றி பாடலின் மூலம் என் வாழ்க்கைக்கு உயிர் தந்த எஸ். ஜானகி அம்மா நம்மை விட்டு சென்றதை நம்ப முடியவில்லை..

வாழ்க்கை கொடுத்த ஜானகி அம்மா: குரலில் மட்டுமின்றி குணத்திலும் குழந்தை போன்ற அந்த இசைக் குயிலின் குரல் என்னைப் போன்ற எத்தனையோ நடிகைகளை நட்சத்திரமாக உயர்த்தி இருக்கிறது.. சரியாக நடக்க கூட தெரியாத என்னை நடனமாட வைத்தது ஜானகி அம்மாவின் அந்த காந்தக்குரல் மட்டுமே. அந்த சரீரம் வேண்டுமானால் மறையலாம், ஆனால் ஜானகி அம்மாவின் சாரீரம் சாகா வரம் பெற்றது. அது மறையவே மறையாது... சென்று வாருங்கள் அம்மா,, கடவுளின் காதுகளையும் கொஞ்சம் சந்தோஷப்படுத்த சென்று வாருங்கள் அம்மா.. - நடிகை விந்தியா" என்று மிகவும் எமோஷனலாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

திரை வாழ்க்கை: ஜானகி அம்மா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் அவர் பாடல்கள் பாடிய அனைத்து மொழி சினிமாக்களிலும் அவர் பாடிய பாடல்கள் மூலம் பலரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றி உள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு முதல் பாடல் பாடியவர் ஜானகி அம்மா தான். அதேபோல் இசைஞானி இளையராஜா இசையில் முதன் முதலில் உருவான படமான அன்னக்கிளி படத்தின் முதல் பாடலைப் பாடியவரும் ஜானகி அம்மா தான். 60 ஆண்டு கால இசை வாழ்க்கையில் பலருக்கும் உத்வேகமாகவும் உறுதுணையாகவும் மறக்க முடியாத நபராகவும் தனது வாழ்க்கையை வாழ்ந்து மறைந்துள்ளார் ஜானகி அம்மா. அவரது குரல் பல தலைமுறைகளும் வாரி அணைத்துக் கொள்ளும் குரல்.


Click it and Unblock the Notifications