நைட் 2 மணிக்கு பவழ மல்லி கயாடு லோஹருக்கு வந்த ஃபோன்.. நீங்கள்தான் வேண்டுமென கேட்ட சாய் அபயங்கர்
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போதைக்கு சென்சேஷனல் இசையமைப்பாளராக இருப்பவர் சாய் அபயங்கர். தனி பாடலில் ஆரம்பித்த அவரது பயணம் இப்போது சூர்யா, அல்லு அர்ஜுன் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. திரைப்படங்களுக்கு இசையமைத்தாலும் தனியாகவும் பாடல் செய்து வெளியிடுகிறார். அந்தவகையில் சமீபத்தில் பவழ மல்லி பாடல் இணையத்தில் சென்சேஷனல் ஆனது. அதில் அவருடன் நடிகை கயாடு லோஹரும் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணியின் மகன் சாய் அபயங்கர். இசை மீது இருக்கும் ஆர்வத்தால் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரிடம் வேலை செய்தார். அவரிடமிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டும், பழகிக்கொண்டும் தனி பாடல் இசையமைத்து வெளியிட ஆரம்பித்தார். அப்படி முதலில் அவர் வெளியிட்ட 'கட்சி சேர பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இசையமைத்து பாடியது மட்டுமில்லாமல் சம்யுக்தாவுடன் சேர்ந்து சூப்பராக நடனமும் ஆடினார். அந்தப் பாடல் பலரது ஃபேவரைட்டாக மாறி ப்ளே லிஸ்ட்டிலும், ரீல்ஸிலும் தவறாமல் இடம்பிடித்தது.

திரைப்பட வாய்ப்பு: தொடர்ந்து அவர் வெளியிட்ட'ஆசை கூட' பாடலும் வைரலாக; யார் இந்த பையன் என கவனிக்க வைத்தார். வெளிச்சம் கிடைத்தவுடனேயே திரையுலக கதவு ட்யூட் படத்தின் மூலம் திறந்தது. அதில் அட்டகாசமான இசையை வழங்கி ஊரும் ப்ளட்டு உள்ளிட்ட பாடல்களை ஹிட்டாக்கினார். இதற்கிடையே தனி பாடல் வெளியிடுவதையும் நிறுத்தாத அவர் தொடர்ச்சியாக சித்திர புத்திரி உள்ளிட்ட பாடல்களையும் வெளியிட்டார். அந்தப் பாடல்களும் கவனம் ஈர்த்தன.
பெரிய படங்கள்: தனி பாடல், திரைப்படம் என எதில் இசையமைத்தாலும் ஹிட் கொடுக்கக்கூடிய அவரை பெரிய இயக்குநர்களும், ஹீரோக்களும் டிக் தொடங்கிவிட்டார்கள். அந்தவகையில் சூர்யாவின் கருப்பு, அல்லு அர்ஜுனின் ராக்கா உள்ளிட்ட படங்களுக்கு அவர்தான் இசை. ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் எப்படி திரைத்துறைக்குள் வந்ததும் சென்சேஷனல் ஆனார்களோ அதேபோல் சாயும் ஆகிவிட்டார். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 'இவர் தமிழ் திரைத்துறையின் வைபவ் சூர்யவன்ஷி'.
பவழ மல்லி பாடல்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் 'பவழ மல்லி' என்ற பாடலை இசையமைத்து வெளியிட்டிருந்தார். அதில் அவருடன் சென்சேஷனல் நடிகையான கயாடு லோஹரும் நடனமாடியிருந்தார். டிராகன் படத்தில் எந்த அளவுக்கு லைம் லைட் கிடைத்ததோ அதே அளவுக்கான வெளிச்சம் இந்தப் பாடல் மூலமும் கயாடுக்கு கிடைத்தது. சாயும், கயாடும் சேர்ந்து ஆடியிருந்த நடனம் பலரையும் ஆட வைத்தது. ஸ்ருதிஹாசனும் தன் பங்குக்கு அட்டகாசமாக பாடியிருந்தார். இதுவரை அந்தப் பாடல் 89 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றிருக்கிறது.
கயாடு லோஹர் பேட்டி: இந்நிலையில் அந்தப் பாடலில் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார் கயாடு லோஹர். அந்தப் பேட்டியில் அவர், "இந்தப் பாடலில் பணியாற்றும் வாய்ப்பு எதார்த்தமாக அமைந்தது. ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணிக்கு அவர் ஃபோன் செய்து, 'என்னிடம் ஒரு சூப்பர் பாடல் இருக்கிறது. அதில் நீங்களும் இருக்க வேண்டும்' என கூறினார். கண்டிப்பாக இது பிளாஸ்ட்டாகும் என நம்பிக்கை எனக்கும் அந்தப் பாடல் கேட்ட பிறகு இருந்தது. மொத்தம் இரண்டு நாட்கள்தான் இந்தப் பாடலுக்கு ரிகர்சல் பார்த்தேன். எனக்கு நடனம் ரொம்ப பிடிக்கும். நடனம் ஆடுவது ஒரு கொண்டாட்டம்" என்றார்.


Click it and Unblock the Notifications















