அமரன் மாஸ் வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி.. உச்சத்தை நோக்கி கரியர்
சென்னை: சாய் பல்லவி மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை தனது முதல் படமான பிரேமம் படத்திலேயே எடுத்துவிட்டார். அதற்கு பிறகு அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் பல்லவியின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு சீனிலும் இந்து ரெபெக்கா வர்கீஸாகவே வாழ்ந்துவிட்டார். இந்தச் சூழலில் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் பிறந்தவர் சாய் பல்லவி. மருத்துவ, நடன கலைஞர் என்று பன்முக திறமை கொண்ட அவர்; அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அவர் ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தை எந்தவித தயக்கமுமின்றி கேரள ரசிகர்களும், தமிழ் ரசிகர்களும் தங்களது மனதுக்குள் ஏற்றிக்கொண்டனர். இதனால் முதல் படத்திலேயே அவருக்கான மவுசு அதிகரித்தது.

வரிசையான வாய்ப்புகள்: பொதுவாக ஒரு ஹீரோயின் முதல் படத்தில் ஃபேமஸ் ஆகிவிட்டால் அவரை சுற்றி பட வாய்ப்புகள் மொய்ப்பது இயல்புதான். அப்படி மொய்க்கும்போது பல ஹீரோயின்கள் தவறான கதைகளை தேர்ந்தெடுத்து காணாமல் போவது உண்டு. ஆனால் சாய் பல்லவி அப்படி இல்லை. தனக்கு வந்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபிக்கும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக நடித்திருந்தார். இதன் காரணமாக வரிசையாக அவருக்கு ஹிட் படங்களே அமைந்தன.
அமரன்: அப்படி அவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய், கார்கி, என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையை சரியாக வெளிப்படுத்தினார். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை நிலையாக தனக்கென தக்க வைத்துக்கொண்டார். சூழல் இப்படி இருக்க அவரது மகுடத்தில் மின்னும் வைரக்கல்லாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த அந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
இந்து ரெபெக்கா வர்கீஸ்: அப்படத்தில் இந்து ரெபெக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் சாய் பல்லவி. படத்தின் ஒவ்வொரு சீனிலும் தனது அதகளமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார் அவர். சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் சாய் பல்லவிதான். அவர், 'முகுந்து' என்று சிவகார்த்திகேயனை கூப்பிடும் இடமாகட்டும்; ஹே மின்னலே பாடலில் சாய் பல்லவியின் க்யூட்னெஸ் ஆகட்டும், க்ளைமேக்ஸில் அவரது இறுக்கமான, கலக்கமான நடிப்பு என மிகப்பெரிய பாய்ச்சலை அமரனில் செலுத்தியிருந்தார் அவர்.
ஹிந்தியிலும்: அமரன் திரைப்படம் பான் இந்தியாவில் வெளியாகி ஹிட்டடித்திருக்கிறது. பல மொழிகளிலும் அமரனை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவியின் நடிப்புக்கு தங்களது ஃபுல் மார்க்கை கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி மற்ற மொழி படைப்பாளிகளும் தங்களது கதைகளில் சாய் பல்லவியை ஹீரோயினாக ஃபிக்ஸ் செய்ய முடிவு செய்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் சிறகடித்துக்கொண்டிருக்கின்றன.
சம்பளம் உயர்வு: ஏற்கனவே அவர் ஹிந்தியில் ராமாயணம் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் சாய் பல்லவி பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இதுவரை மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த சாய் பல்லவி; அமரன் படத்தின் மெகா வெற்றியாலும்; தனக்கு கிடைத்த சூப்பர் ரெஸ்பான்ஸாலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஆறு கோடி ரூபாய்வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள்; சாய் பல்லவியின் திறமைக்கு இந்த சம்பளம் கேட்கலாம்தான். வொர்த்துதான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











