எனக்கு அந்த உடைதான் வசதி பாஸ்.. அதையெல்லாம் யோசிக்கக்கூடாது.. ஓபனாக பேசிய சாய் பல்லவி
சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர் சாய் பல்லவி. அதன் காரணமாக தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த அரங்கத்தில் ஆடிய ஒவ்வொரு நடனத்தின் அசைவும் அனைவரையும் கவர்ந்தது. இதற்கிடையே அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் மருத்துவமும் படித்திருக்கிறார்.

மனதை திருடிய மலர் டீச்சர்: இதனையடுத்து பிரேமம் படத்தில் அறிமுகமானார் சாய் பல்லவி. முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் தங்களது நெஞ்சத்தில் குத்தி வைத்துக்கொண்டனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
எதார்த்த அழகுதான் பிடிக்கும்: ஹீரோயின் என்றாலே மேக்கப்புகளை அள்ளி பூசிக்கொண்டு, வித விதமான உடையை அணிந்துகொண்டு, வழவழப்பான மரு இல்லாத கன்னங்களுடன் வலம் வர வேண்டும் என ஒரு விதி இருந்தது. அதை உடைத்ததில் பெரும் பங்கு சாய் பல்லவிக்கு உண்டு. அவரை பார்த்தால் நம்மிலிருந்து ஒரு பெண் நடிக்க சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். நிகழ்ச்சிகளுக்கு வந்தால் திகட்டாத மேக்கப், உடைகள் என எதையும் அணிந்துகொள்ளாமல் வெகு இயல்பாக தோன்றுவதாலேயே ரசிகர்கள் சாய் பல்லவியை தங்கள் வீட்டு பெண்ணாக நினைக்க தொடங்கியிருக்கின்றனர்.
பிஸி சாய் பல்லவி: அவர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்த கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் தண்டல், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியான நடிகையாக வலம்வருகிறார். அதேபோல் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் பெரும்பாலும் புடவை அணிந்தபடிதான் வருவார் சாய் பல்லவி. அது பலரையும் கவர்ந்துவிடும்.
சாய் பல்லவி பேட்டி: இந்நிலையில் நிகழ்ச்சிகளுக்கு புடவை அணிந்துவருவது பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கும் சாய் பல்லவி, 'எனக்கு எப்போதும் புடவைதான் Comfortable. அதுதான் வசதியாக இருக்கிறது. ஒரு இடத்தில் பேச வேண்டும் என்றால் என்ன பேச வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். உடையை பற்றியெல்லாம் அந்த நேரத்தில் யோசித்துக்கொண்டிருக்கக்கூடாது. அதனால்தான் எனக்கு வசதியாக இருக்கும் புடவையில் நிகழ்ச்சிகளுக்கு வருகிறேன்' என்றார்.


Click it and Unblock the Notifications











