தாமதம் எல்லாம் ஆகவில்லை.. தாயாக வேண்டும்.. ஆசை இன்னும் இருக்கிறது..ஓபனாக போட்டுடைத்த சமந்தா
சென்னை: நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமந்தா பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது உடன் நடித்த நாக சைதன்யாவை காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதலுக்கு முதலில் சைதன்யாவின் வீட்டில் ஒப்புதல் கிடைக்காததால் சில காலம் திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டார்கள். கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் திருமணம் ஜோராக நடந்தது.

விவாகரத்து: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சமந்தாவின் நடிப்பு பயணத்தை நாகார்ஜுனா குடும்பம் விரும்பாததால் சில பிரச்னைகள் ஆரம்பத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சி கிளப்பினார்கள். அவர்களது விவாகரத்து அறிவிப்பு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் ஷாக்கை கொடுத்தது.
சிட்டாடல் ரிலீஸ்: அதனையடுத்து மையோசிடிஸ் நோய் சமந்தாவை தாக்க அதிலிருந்து மீண்டார் அவர். அதன் பிறகு அவர் நடித்த சாகுந்தலம், குஷி படங்கள் தோல்வியடைந்தன. தொடர்ந்து குட்டி பிரேக் எடுத்தார். சூழல் இப்படி இருக்க தற்போது அனைத்து பிரச்னைகளையும் கடந்து சமந்தா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு சிட்டாடல் ஹனி பன்னி சீரிஸ் வெளியானது. அந்த சீரிஸுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
சமந்தாவின் பேட்டி: இந்நிலையில் சமந்தா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், “நான் தாய்மை அடைவது மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. எனக்கு ஒரு தாயாக வேண்டும் என்ற கனவுகள் இன்னமும் இருக்கின்றன. நிச்சயமாக ஒரு தாயாக இருக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். அது ஒரு அழகான அனுபவம். அதைத்தான் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
எதுவுமே இல்லை: மக்கள் பெரும்பாலும் எனது வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் தாயாக இருக்க முடியாத நேரம் என்று வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்றார். முன்னதாக சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்கள். அதுகுறித்து ட்விட்டர் உரையாடலில் பேசியிருந்த சமந்தா, 'எனக்கு இரண்டாவது திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை.முதல் திருமணத்தைவிடவும் இரண்டாவது திருமண விவாகரத்துகள்தான் அதிகம் என்று புள்ளிவிவரம் இருக்கிறது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











