நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஜோரா குதிரை சவாரி செய்யும் சமந்தா.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை சமந்தா குதிரை சவாரி செய்யும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
மயோசிடிஸ் எனும் அரிய வகை பாதிப்பு காரணமாக படுத்த படுக்கையாக கடந்த 8 மாதங்கள் தீவிர சிகிச்சை எடுத்து வந்த சமந்தாவால் இனி எழுந்து நடக்கக் கூட முடியாது என பேச்சுக்கள் கிளம்பின.
ஆனால், பீனிக்ஸ் பறவை போல தனது விடா முயற்சி மூலமாக மீண்டும் எழுந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

சென்னை பொண்ணுன்னா சும்மாவா
சென்னையை சேர்ந்த பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழிலும் அதே படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருப்பார். பானா காத்தாடி, நான் ஈ, மாஸ்கோவின் காவேரி என நடித்து வந்த சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் என பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நாக சைதன்யாவுடன் விவாகரத்து
முதல் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை திருமணம் செய்து கொண்டு டோலிவுட்டில் பல படங்களில் நடித்து அங்கேயும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் சமந்தா. ஆனால், கடந்த 2021ம் ஆண்டு சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

மயோசிடிஸ் பாதிப்பு
கணவரை விவாகரத்து செய்தாலும் பாலிவுட்டில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த நிலையில், சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த சமந்தாவுக்கு எதிர்பாராத விதமாக தசை அழற்சி நோய் எனும் மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் அந்த நோயுடன் பெரும் போராட்டத்தையே சந்தித்த சமந்தா யசோதா படத்தின் ப்ரோமோஷனுக்காக நோய் பாதிப்புடனே கலந்து கொண்டு கண்ணீர் சிந்தியது ரசிகர்களை உலுக்கியது.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
நடிகை சமந்தாவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பழையபடி அவரால் சிரமப்பட்டு நடிக்க முடியாது என சில படங்களில் இருந்து அவரை அதிரடியாக நீக்கியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், மீண்டும் தன்னால் பழைய படி நடிக்க முடியும் என கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும், பாக்ஸிங் செய்யும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் நடிகை சமந்தா.

குதிரை சவாரி
பாலிவுட்டில் வருண் தவான் உடன் இணைந்து சிட்டாடல் எனும் வெப்சீரிஸில் இணைந்துள்ள சமந்தா, விஜய் தேவரகொண்டா உடன் குஷி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குதிரை மீது சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சாகுந்தலம் விரைவில்
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சாகுந்தலம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. கூடிய விரைவிலேயே அந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது. விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்திற்காக நடிகை சமந்தா நார்வே செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி 68 ஹீரோயின்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலேயே சமந்தா தான் ஜோடி என தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் சமந்தாவுக்கு பதில் த்ரிஷா மாற்றப்பட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா தான் நடிக்கப் போகிறார் என்றும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











