Saroja Devi: அபிநய சரஸ்வதி.. கன்னடத்து பைங்கிளி.. எம்ஜிஆருடன் 26 ஹிட் படங்களை கொடுத்த சரோஜா தேவி!
சென்னை: 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி மைசூரில் பிறந்து வளர்ந்த சரோஜா தேவி 1957ம் ஆண்டு தனது 17 வயதில் கன்னடத்தில் வெளியான மகாகவி காளிதாஸா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1956ம் ஆண்டு தனது 18வது வயதில் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான திருமணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சரோஜா தேவி எம்ஜிஆருடன் 26 ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அபிநய சரஸ்வதி என்றும் கன்னடத்துப் பைங்கிள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் சரோஜா தேவி மீது செலுத்திய அன்பு சொல்லில் அடங்காத ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சரோஜா தேவி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக பெங்களூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆருடன் நடித்த நடிகைகள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர்களில் சரோஜா தேவி பெயர் என்றுமே நிலைத்திருக்கும். நாடோடி மன்னன் படம் தான் சினிமாவில் சரோஜா தேவிக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
காலமானார் கன்னடத்துப் பைங்கிளி: திருமணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரோஜா தேவி கடைசியாக சூர்யா நடித்த ஆதவன் படத்தில் பாட்டி ரோலில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார். 2020ம் ஆண்டு கடைசியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான கோடீஸ்வரி நிகழ்ச்சியில் சிறப்பு போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர், மீடியா வெளிச்சம் இல்லாமல், பெங்களூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த சரோஜா தேவி உடல்நலக்குறைவு மற்று வயது மூப்புக் காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு செய்தியை அறிந்த இந்திய திரையுலகம் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பானுமதி, சாவித்ரி, ஜெயலலிதா, போன்ற பல திரையுலக ஆளுமைகள் மறைந்த நிலையில், தென்னிந்திய சினிமாவின் ஐகானாக இருந்த சரோஜா தேவி இன்று மண்ணை விட்டுச் சென்றாலும் என்றுமே ரசிகர்களின் மனதை விட்டு நீங்கமாட்டார்.
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்: ஜெமினியுடன் 'திருமணம்' படத்தில் நடித்து தமிழில் அறிமுமகான சரோஜா தேவி, சிவாஜி கணேசன் உடன் தங்கமலை ரகசியம் படத்தில் நடித்திருந்தார். 1958ம் ஆண்டு எம்ஜிஆர் இயக்கி நடித்து வெளியான நடோடி மன்னன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சரோஜா தேவி எம்ஜிஆரின் ஆஸ்தான ஹீரோயினாகவே மாறினார். தொட்டதெல்லாம் பொன் போல இருவரும் இணைந்து நடித்த 26 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. எம்ஜிஆருடன் இணைந்து அவர் நடித்த ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், தொட்டால் பூ மலரும் பாடல்கள் எல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை.
எம்ஜிஆருடன் 26 ஹிட் படங்கள்: நாடோடி மன்னன், திருடாதே, தாய் சொல்லை தட்டாதே, பாசம், குடும்பத் தலைவன், மாடப்புறா, தாயை காத்த தனயன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தெய்வத்தாய், படகோட்டி, ஆசைமுகம், நாடோடி, தாலி பாக்கியம், நான் ஆணையிட்டால், பெற்றால் தான் பிள்ளையா, அரசக்கட்டளை, பணத்தோட்டம், பெரிய இடத்துப்பெண், பணக்கார குடும்பம், என் கடமை, தாயின் மடியில், எங்க வீட்டுப்பிள்ளை, கலங்கரை விளக்கம், அன்பே வா, பறக்கும் பாவை என 26 ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் ஆரம்பிக்கும் போது, மணிமேகலை கதாபாத்திரத்தை சரோஜா தேவிக்கு வழங்கினார். ஆனால், அந்த படம் எடுக்கப்படாமலே நின்றுவிட்டது.
மறக்க முடியாத நாயகி: சோப்பு போட்டு குளிக்கும் போதெல்லாம் சரோஜா தேவி நினைவு வரும் அளவுக்கு பிதாமகன் படத்தில் சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா என சூர்யா பேசிய வசனம் ரசிகர்கள் மனங்களில் எப்போதுமே எதிரொலிக்கும். ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜி மற்றும் விஜய்யுடன் நடிக்கும் போது, அவர் கோபப்பட்டால் கூட அழகாகவே தெரிவது எல்லாம் தனி வரப்பிரசாதம். எம்ஜிஆருடன் 26 ஹிட் படங்களில் நடித்த சரோஜா தேவி சிவாஜியுடன் சேர்ந்து 22 ஹிட் படங்களை கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











