முக்கிய ஆவணம் சிக்கியது.. பண மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது!
சென்னை: பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் போலீசார் ஜெயலட்சுமி இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015ம் ஆண்டில் இருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

சினேகன் அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருவதாகவும், ஆனால் சமீப காலமாக இணையதளத்தில் தனது பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது புகார் கூறியிருந்தார். மேலும், எனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
பொய்யான புகார்: இதையடுத்து, பாடலாசிரியர் சினேகன் என்பவர் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் நான் பண மோசடி செய்திருப்பதாகவும், என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், சினேகன் அவர்களுக்கு செல்ல வேண்டிய பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். பெண் என்றும் பாராமல் பொது வெளியில் அவமரியாதை செய்ததாக சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் கொடுத்திருந்தார். இதனடிப்படையில் சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சினேகன் மீதான வழக்கை ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி ஆவணம்: இந்நிலையில், வழக்கு தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் ஜெயலட்சுமி இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து அவர் மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











