வாய்ப்புக்காக நான் அப்படி எதுவுமே செய்யல.. பாலா அசிங்கப்படுத்தினார்.. ஹீரோயின் கிளப்பிய அதிர்ச்சி
சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சேது பட ஹீரோயின் பாலா குறித்து அதிர்ச்சி விஷயத்தை கூறியிருக்கிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
குற்றச்சாட்டு: பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் அடிப்பார் என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாகவே இருந்துவருகிறது. பரதேசி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்கூட குச்சியை வைத்து அவர் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. ஆனால் அது ஒரிஜினல் குச்சி இல்லை டம்மி குச்சி என்று பாலா கூறியிருந்தார். இந்தச் சூழலில் முதலில் வணங்கானில் சூர்யா நடித்தபோது அப்படத்தில் இருந்த பிரேமலு நடிகை மமிதா பைஜு சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.
அபிதாவின் குற்றச்சாட்டு: இந்நிலையில் சேது படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அபிதா பாலா குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "சேது படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது வேறு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அது பாலாவுக்கு கோபமோ என்னமோ தெரியவில்லை. அதற்கு பிறகு சேது பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கவே இல்லை. படத்தை ரஜினி சாருக்கு போட்டு காண்பித்தபோதுகூட விக்ரம், பாலா, தயாரிப்பாளர்தான் இருந்தார்கள். என்னை அழைக்கவில்லை.
நான் அப்படி செய்யவில்லை: ஒரு படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேருமே முக்கியம். நானும் அந்தப் படத்துக்காக கடின உழைப்பை போட்டிருக்கிறேன். படத்தை பார்த்த இளையராஜா சார் என்னை மிகவும் பாராட்டியதாகவும்; நன்றாக நடித்திருக்கிறார் என்று சொன்னதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் பாலாவோ அசிங்கம்தான் படுத்தினார். நான் இவை எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளவில்லை. பாலா இருந்தது போன்றே நானும் இருந்துகொண்டேன். மேலும் அதன் பின்பு வாய்ப்புக்காக நான் அவரிடம் எதுவும் கேட்கவும் இல்லை; எனக்கு அது தேவையும் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications