Shruthi Haasan - சமந்தா நடிக்கவிருந்த ஹாலிவுட் படம்.. வாய்ப்பை தட்டி தூக்கிய ஸ்ருதி ஹாசன்.. பரபர தகவல்
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கிவரும் அவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். பிலிப் ஜான் இயக்கவிருக்கும் அந்தப் படத்தில் முதலில் நடிக்க சமந்தாதான் கமிட்டாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன். பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், டயலாக் டெலிவரியும் அவருக்கு புகழை ஏற்படுத்திக்கொடுத்தன.

தனுஷுடன் ஸ்ருதி ஹாசன்: ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.
கடைசியாக நடித்த படம்: தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. கடைசியாக கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படத்தில் லீடு ரோல் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன்.
ஹாலிவுட் வாய்ப்பு: இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் என்பவர் சென்னை ஸ்டோரி என்ற படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தில்தான் அவர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அப்படத்தில் ஸ்ருதி ஹாசன் டிடெக்டிவ்வாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் அடிப்படையில் ஒரு சென்னை பெண்ணாக இருப்பதால் இப்படத்தில் நடிப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். பிலிப் ஜான் இயக்கத்தில் நடிக்கவிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
முதலில் சமந்தா: முன்னதாக இந்தப் படத்தில் முதலில் நடிக்க கமிட்டானவர் சமந்தாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும்; இயக்குநர் பிலிப் ஜானுடன் அவர் இருக்கும் புகைப்படமும் வெளியாகி ட்ரெண்டாகின. ஆனால் திடீரென சமந்தா மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சிகிச்சையை முடித்துக்கொண்டு மீண்டும் திரும்பிய அவர் சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார்.
குட்டி பிரேக்: ஆனால் தற்போது சினிமாவிலிருந்து மீண்டும் ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறார். அதனால் அவர் சென்னை ஸ்டோரி படத்தில் நடிக்கவில்லை. இனியும் சமந்தாவுக்காக காத்திருந்தால் நாட்கள்தான் வீணாகும் என்று முடிவு செய்த இயக்குநர் பிலிப் உடனடியாக ஸ்ருதி ஹாசனை கமிட் செய்துவிட்டதாக தெரிகிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











