17 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஸ்ருதிஹாசன்
புனே: நடிகை ஸ்ருதிஹாசன் புனேவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புனேவை சேர்ந்த ஷீத்தல் பவார் (17) என்ற சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையில், மருத்துவர்கள் கை விரித்து விட வீட்டிற்கு அழைத்து வரப் பட்டார் ஷீத்தல்.
தனக்கு பிடித்தமான நடிகை ஸ்ருதி ஹாசனை நேரில் பார்க்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என ஷீத்தல் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

கடைசி ஆசை...
ஷீத்தலின் கடைசி ஆசை குறித்து வித்யுத் ஜமால் உடன் ‘யாரா' இந்தி பட ஷூட்டிங்கில் மும்பையில் நடித்துக்கொண்டிருந்த ஸ்ருதியிடம் மேக் ஏ விஷ் என்ற அமைப்பு தெரிவித்தது.

நேரில் காண சென்றார்...
இதைக் கேள்விப்பட்ட ஸ்ருதி, ஷீத்தலின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதன்படி, இயக்குநரிடம் அனுமதி பெற்று ஷீத்தலை நேரில் காண அவரது வீட்டிற்குச் சென்றார்.

சினிமா பற்றி பேச்சு...
ஒரு நாள் முழுவதும் ஷீத்தலுடன் பொழுதைக் கழித்த ஸ்ருதி, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அவரது மன தைரியத்தைப் பாராட்டினார். நீண்ட நேரம் இருவரும் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்ததாக ஷீத்தலின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கடிதம்...
தன் கைப்பட எழுதிய ஒரு கடிதம் ஒன்றை ஷீத்தலிடம் வழங்கிய ஸ்ருதி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மும்பை சென்றார்.


Click it and Unblock the Notifications











