Simran: 90ஸ் கிட்ஸ் கனவுக் கன்னி... என்றென்றும் இடையழகி... சிம்ரன் பிறந்தநாள் இன்று!
சென்னை: 90களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். VIP படத்தில் அறிமுகமான சிம்ரன், பின்னாளில் கோலிவுட் ரசிகர்களின் நிரந்தர V.I.P-ஆகவே மாறிவிட்டார். ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த் என டாப் ஸ்டார்களின் ஜோடியாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில், இன்று தனது 47வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சிம்ரன் வெற்றியின் காரணத்தை பார்க்கலாம்.

கோலிவுட் இடையழகி
1997ம் ஆண்டு வெளியான V.I.P திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிம்ரன். முதல் படத்தில் ப்ரியா என்ற கேரக்டரில் நடித்ததாலோ என்னவோ, பல படங்களிலும் இதே பெயரிலேயே நடித்து ரசிகர்களின் மனதில் Free-யாகவே இடம் பிடித்துவிட்டார். ஒருசில நடிகைகள் மட்டுமே அறிமுகமானது முதலே டாப் கியரில் பயணிக்க முடியும். அவர்களில் மிகச் சிறந்த உதாரணம் என்றால் அது சிம்ரன் தான். சிம்ரன் என்ற பெயரை விடவும் இடையழகி என்ற புனைப் பெயரில் சித்திரம் போல பதிந்துவிட்டார் இவர்.

தமிழ்நாட்டு வீரலெட்சுமி
முதல் படமான VIP அதிகம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், விஜய்யுடன் ஒன்ஸ்மோர், சூர்யா ஜோடியாக நேருக்கு நேர், அப்பாஸுடன் பூச்சூடவா, அஜித்துடன் அவள் வருவாளா போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வழக்கமாக்கி வைக்கப்பட்டிருந்த மும்பை இறக்குமதி ஹீரோயின் என்ற அடையாளம் தான், ஆரம்பத்தில் சிம்ரன் மீதும் விழுந்தது. ஆனால், பொட்டுவைத்து பூ முடித்து தாவணியோ அல்லது சேலையோ கட்டிவிட்டால் போதும். தமிழ்நாட்டின் எல்லா ஊரும் சிம்ரனுக்கு சொந்த ஊராக இருக்கும் என்றே நினைக்கத் தோன்றும்.

சிம்ரனின் நிஜப் பெயர்
பஞ்சாபி பெற்றோர்களுக்கு 1976ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிறந்த சிம்ரனின் நிஜப் பெயர் ரிஷிபாலா நாவல். சினிமாவில் நடிக்க வந்த நிலையில் தான் மும்பையை சேர்ந்த ரிஷிபாலா சிம்ரனாக ரசிகர்கள் நெஞ்சங்களில் ஓட ஆரம்பித்தார். சிம்ரனின் சகோதரி மோனலும் சினிமாவில் ஹீரோயினாக வளர்ந்து வரும் போதே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது நடிகை சிம்ரனை ரொம்பவே வேதனையில் ஆழ்த்தியது. ஜோதி ஆனந்த் எனும் ஒரு தங்கையும் சுமீத் நாவல் எனும் தம்பியும் சிம்ரனுக்கு உள்ளனர்.

ஜெயா பச்சன் பார்வையில் பட்ட சிம்ரன்
1995ம் ஆண்டு இந்தியில் வெளியான சனம் ஹர்ஜல் படத்தில் நடித்த சிம்ரன், அதே ஆண்டு
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் முக்காப்லா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அவரது திறமையை பார்த்து அசந்துப் போன அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் 1996ம் ஆண்டு தேரே மேரே சப்னே படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் நடித்த சிம்ரனுக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. மலையாளத்தில் 96ல் இந்திரபிரஸ்தம் படத்தில் நடித்த சிம்ரன் தமிழில் 97ல் விஐபி படத்தில் அறிமுகமானார்.

சிம்ரன் என்றாலே ஹிட் தான்
சிம்ரனின் முதல் வெற்றியே அவரது முகத்தில் தமிழ்நாட்டு பெண்களின் சாயல் சாந்தமாக ஒட்டியிருக்கும். கோபமான காட்சிகளில் நடிக்கும் போது, அவரது மூக்கின் அழகோடு சேர்ந்து அந்த மூக்குத்தியையும் சிவக்க வைப்பதில் கெட்டிக்காரி. வெடுக்கென்று வெட்டி பேசுவதாகட்டும் தாய்மை உள்ளத்தோடு நாயகர்களை வாரியணைப்பதாகட்டும், காதல் உச்சம் தொடும் வேளைகளில் கட்டில் மீது கலவி யுத்தம் புரிவதாகட்டும்! இப்படி எல்லா கோணங்களிலும் அவர் செந்தமிழ் நாட்டு தமிழச்சியாகவே ஜொலித்தார். அதனாலேயே சிம்ரனின் படங்கள் என்றாலே ஹிட் தான் ரசிகர்கள் தீர்ப்பு எழுதிவிடுவார்கள்.

என்றென்றும் சிம்ரன்
ஹீரோக்கள் யார் என்று பார்க்கும் அளவிற்கு கதைகளையும் ரொம்பவே தேர்ந்தெடுத்து நடித்தார் சிம்ரன். கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ப்ரியமானவளே, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், நியூ, வாரணம் ஆயிரம் என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். கண்ணெதிரே தோன்றினாள், வாலி, ப்ரியமானவளே ப்ரியாவை எப்படி மறக்க முடியாதோ, அப்படித்தான் துள்ளாத மனமும் துள்ளும் ருக்மணியையும், வாரணம் ஆயிரம் மாலினியையும் நினைக்காமல் இருக்க முடியாது. கிளாமர் காட்சிகளில் கூட ரசிகர்களின் பரிதாபத்தை வரவைக்க முடியும் என்பதற்கு வாலி படம் ஒன்றே சாட்சி.

நடனத்தில் லேடி பிரபுதேவா
காமெடி, எமோஷனல், காதல், கருணை என நடிப்பில் நவரசத்தையும் நிரப்பியவர், நடனத்தில் மட்டும் தனி எல்லைகளை தொட்டார். வெஸ்டர்ன், கிளாசிக், ஐட்டம் சாங், ரொமாண்டிங் பெர்ஃபாமன்ஸ் என சிம்ரனின் நடனத்தை கொண்டாடித் தீர்த்தது இந்த தமிழ்ச் சமூகம். ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில், தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா, ஆல்தோட்ட பூபதி என சிம்ரன் ஆடிய ஆட்டம் என்றென்றும் ரசிகர்களின் ஃபேவரைட் என்றால் அது மிகையாகாது. சுருக்கமாக சகலகலா வல்லமை கொண்ட நடிகையாக வலம் வந்த சிம்ரன், தொடர்ந்து பல சாதனைகள் படைக்க தமிழ் ஃபிலிமிபீட் சார்பாக வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











