ரூ20 கோடி நஷ்டஈடு கேட்கும் சிம்ரன்
தன்னை எய்ட்ஸ் நோயாளியாக சித்தரித்துப் படம் எடுத்த மலையாளப் பட இயக்குநர் ஜாலி ஜோசப் மற்றும் இயக்குநர் வினு ஆனந்த் ஆகியோர் ரூ. 20 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று கோரி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை சிம்ரன்.
கல்யாணத்திற்குப் பின்னர் தமிழில் வாய்ப்பு தேடி வந்த சிம்ரனுக்கு தமிழில் ஒரு படமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரைத் தேடி ஹார்ட் பீட்ஸ் என்ற மலையாளப் படம் வந்தது.இப்படம் சமீபத்தில் ரிலீஸானது. அப்படத்தைப் பார்த்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். காரணம், எய்ட்ஸ் நோயாளியாக அதில் சிம்ரன் சித்தரிக்கப்பட்டிருந்தார்.
இதைக் கேள்விப்பட்ட சிம்ரன் கடும் கோபமடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், படத்தின் கதைப் போக்கு எனக்குப் பிடிக்காததால் படத்திலிருந்து பாதியிலேயே விலகி விட்டேன். இந்த நிலையில் என்னை எய்ட்ஸ் நோயாளி போல சித்தரித்துள்ளனர். நான் இறப்பது போலவும் காட்டியுள்ளனர்.
இது கண்டனத்துக்குரியது. இதை நான் சும்மா விட மாட்டேன், வழக்குப் போடுவேன் என்று எச்சரித்திருந்தார். ஆனால் இதற்குப் பதிலளித்த தயாரிப்பாளர் ஜாலி ஜோசப், படத்தில் நடித்ததற்காக முழு சம்பளத்தையும் சிம்ரனுக்குக் கொடுத்து விட்டோம். இந்த நிலையில் படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
இந்த நிலையில் சிம்ரன் சார்பில் ஜாலி ஜோசப் மற்றும் இயக்குநர் வினு ஆனந்த் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் போயுள்ளது.
அந்த மனுவில் சிம்ரனை எய்ட்ஸ் நோயாளி போல தாங்கள் சித்தரித்துள்ளீர்கள். படத்திலிருந்து அவர் பாதியில் விலகியதால் உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே இப்படிச் செய்துள்ளீர்கள்.
எனவே எனது பெயரை சேதப்படுத்தியமைக்காக ரூ. 20 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம்.
முதலில் ரூ. 2கோடிக்கு நஷ்ட ஈடு கேட்க சிம்ரன் முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது வக்கீலுடன் ஆலோசனை நடத்திய பிறகு ரூ. 20 கோடி கேட்க தீர்மானித்தாராம்.
இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.1 கோடிக்குள்தானாம். அதிலும் சிம்ரனுக்குத் தரப்பட்ட சம்பளம் ரூ. 6 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











