உன்னை நினைக்காத நாளே இல்லை மோனல்.. தங்கையை நினைத்து கலங்கும் சிம்ரன்
சென்னை: சிம்ரன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். அவர் பீக்கில் இருந்தபோது நடிக்க வந்த நடிகைகள் அனைவருமே எப்படியாவது சிம்ரன் மாதிரி வளர்ந்துவிட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்கள். அவருக்கு மோனல் என்ற தங்கை இருந்தார். கோலிவுட்டில் பார்வை ஒன்றே போதுமே படத்தில் அறிமுகமான அவர் சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் வளர்வார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் அவர்.
மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் சிம்ரன். இவர் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்தப் படம்தான் நியூசிலாந்தில் முதன்முறையாக ஷூட் செய்யப்பட்ட இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்ற சூழலில் சூப்பர் ஹிட் முக்காபுல்லா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனின் கண்களில் சிம்ரன் பட அவரது வாழ்க்கை மாறியது.
குவிந்த வாய்ப்புகள்: அதன்படி 1996ஆம் ஆண்டு அமிதாப்பின் கம்பெனி தயாரித்த தெரெ மெரே சாப்னே படத்தில் ஹீரோயினாக மாறினார் சிம்ரன். அவருக்கு மிகச்சிறந்த பெயரை அந்தப் படம் பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து தமிழில் விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற மின்னல் ஒரு கோடி பாடலில் சிம்ரனின் நடனத்தையும், அழகையும் பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயினர். தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தது.

செம ஃபேமஸ்: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு சிம்ரனுக்கு தொடர்ந்து கோலிவுட்டில் வாய்ப்புகள் கொட்டி கிடைக்க ஆரம்பித்தன. அவரும் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒருபக்கம் கிளாமர் ரோலில் கலக்கிய அவர்; மறுபக்கம் ஹோம்லி கேரக்டர் கொடுத்தாலும் அதிலும் தனது தடத்தை பதித்தார். இதன் காரணமாக தமிழ் சினிமாவுக்கு ஒரு நடிக்க தெரிந்த நடிகை கிடைத்துவிட்டார் என்று ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரியும் பேசியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்.
திருமணம் செய்துகொண்ட சிம்ரன்: அவர் எவ்வளவுக்கு எவ்வளவு பீக்கில் இருந்தாரோ அதே அளவு கிசுகிசுக்களிலும் சிக்கியவர். அதாவது சில நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்ட அவர் தனது பால்ய கால தோழரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வாரணம் ஆயிரம் திரைப்படம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கடைசியாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிம்ரனின் தங்கை மரணம்: இதற்கிடையே சிம்ரனின் தங்கையான மோனலும் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அதன்படி அவர் பார்வை ஒன்றே போதுமே படத்தில் இன்ட்ரோ ஆனார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனையடுத்து பத்ரி, சமுத்திரம், இஷ்டம், விவரமான ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்படிப்பட்ட சூழலில் என்ன ஆனதோ தெரியவில்லை கடந்த 2002ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார் அவர்.
சிம்ரனின் பதிவு: மோனலின் மறைவு அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மோனலின் 23ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி சிம்ரன் தனது சமூக வலைதள பக்கத்தில், "இந்த 23 வருடங்களில் ஒருநாள்கூட உன்னை நாங்கள் நினைக்காமல் இருந்ததில்லை மோனல். நீ மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











