இந்தியில் நடிக்கும் ஜோதிகா.. தொடர்ந்து ‘நோ’ சொல்லும் சிம்ரன்.. அடேங்கப்பா இப்படியொரு காரணமா?
சென்னை: மும்பையில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி பெண்ணான நடிகை சிம்ரன் தொடர்ந்து தான் பாலிவுட் படங்கள் மீது மோகம் கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார். பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதும், தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் படங்களில் எப்படியாவது நடிக்க வேண்டும் என போட்டிப் போட்டு வாய்ப்புகளை பெறுவதும் இயல்பான ஒன்றாகவே மாறியுள்ளது.
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் பாலிவுட் படங்களில் நடித்து இந்தி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகின்றனர். அந்த காலத்திலேயே ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் இந்தியில் அசத்தியுள்ளனர்.

ஆனால், நடிகை சிம்ரனுக்கு இந்தி படங்களில் நடிக்க பிடிக்கவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ள விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் மோகம்: தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு இந்தியில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்கிற மோகம் காரணமாக அஜய் தேவ்கனின் மைதான் பட வாய்ப்புக்காக தனது உடல் எடையை மொத்தமாக குறைத்தார். ஆனால், அதன் காரண்மாகவே அவருக்கு அந்த பட வாய்ப்பு பறிபோனது. அட்லி தயாரிப்பில் வெளியான தெறி இந்தி ரீமேக் படமான பேபி ஜான் மூலம் இந்தியில் நடித்தார். ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா என பல இளம் நடிகைகள் பாலிவுட்டில் கலக்கி வருகின்றனர். நடிகை சமந்தா இந்தி வெப்சீரிஸ்களான ஃபேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் ஹனி பன்னி உள்ளிட்டவற்றில் நடித்தும் இந்தி படத்தில் நடிக்க அவருக்கு இன்னமும் ஒரு வாய்ப்புக் கூட கிடைக்கவில்லை.
மும்பைக்கு போன ஜோதிகா: மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோதிகா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகளை பெற்று பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கிய நிலையில், அவருக்கு பெரிதாக வெற்றிகள் கிடைக்கவில்லை. திடீரென குடும்பத்துடன் மும்பைக்குச் சென்று செட்டிலான ஜோதிகா தொடர்ந்து இந்தியில் படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

இந்தியில் நடிக்கப் பிடிக்கவில்லை: நடிகை சிம்ரனும் மும்பையில் பிறந்து வளர்ந்த பெண் தான். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர் மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக வில்லியாகவும் கிடைக்கும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தி படங்களில் நடிக்க நீங்க ஏன் முயற்சி செய்யவில்லை, என்கிற கேள்விக்கு பதிலளித்த சிம்ரன், தமிழில் இருந்து இந்திக்கு போய் வேலை பார்க்கணும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல, இங்கே எனக்கு ரொம்பவே நிம்மதியா இருக்கு. பாலிவுட்டில் நடிக்க போகணும்னா அங்கே ரொம்ப ஷோ ஆஃப் பண்ணனும் அதெல்லாம் நமக்கு சுத்தமாக செட்டாகாது என்று நினைத்து இங்கேயே இருந்துவிட்டேன் எனக்கூறியுள்ளார். சமந்தா நடித்த சிட்டாடல் வெப்சீரிஸில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்திருந்தாலும் இந்தியில் படங்களில் நடிப்பதில் அவர் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்குப் பிறகு தமிழில் சிம்ரனுக்கு மேலும், பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











