சௌந்தர்யாவை மோகன் பாபு கொலை செய்தாரா?.. கணவர் கொடுத்த பரபரப்பு விளக்கம்
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் ஒரு பரபரப்பு கிளம்பியது. அதாவது கடந்த 2004ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சௌந்தர்யாவை நடிகர் மோகன் பாபுதான் கொலை செய்தார். அதனை விபத்து போல் சித்தரித்துவிட்டார் என்று சிட்டிமல்லு என்பவர் புகார் கொடுத்தார். அந்தப் புகார் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியது. இப்படிப்பட்ட சூழலில் சௌந்தர்யாவின் கணவர் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட சௌந்தர்யாவுக்கு தெலுங்கு சினிமாவில் பலத்த வரவேற்பு கிடைத்தது. அங்கு ஏராளமான ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர்; 1993ஆம் ஆண்டு தமிழில் வெளியான பொன்னுமணி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக நெஞ்சுக்குள்ளே இன்னாருனு பாடலில் சௌந்தர்யாவின் அழகை பார்த்த தமிழ் ரசிகர்கள் அவரை வெகுவாகவே ரசிக்க ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகை: பொன்னுமணி படத்துக்கு பிறகு தமிழில் சௌந்தர்யாவுக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா, கமல் ஹாசனுடன் காதலா காதலா, விஜயகாத்துடன் தவசி, சொக்கத்தங்கம் என ஏராளமான படங்களில் நடித்தார். கோலிவுட்டில் அறிமுகமான சில வருடங்களிலேயே தமிழின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டதால் கண்டிப்பாக சௌந்தர்யாவின் அலை இன்னும் பல வருடங்களுக்கு இங்கு வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
அரசியலில் கவனம்: திருமணம் ஆன கையோடு சௌந்தர்யா அரசியலில் கவனம் செலுத்தினார். அவரது கணவரான ரகு என்பவருக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சௌந்தர்யாவும் அரசியலில் தனது கவனத்தை திருப்பியதாக சொல்லப்படுவதுண்டு. சூழல் இப்படி இருக்க கடந்த 2004ஆம் ஆண்டு பாஜகவை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக ஹெலிகாப்டரில் தனது சகோதரர் அமர்நாத்துடன் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக சௌந்தர்யாவும், அமர்நாத்தும் உயிரிழந்தார்கள்.

புதிய பரபரப்பு: அவர்கள் இறந்து 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது சிட்டிமல்லு என்பவர் காவல் துறையில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்தப் புகாரில், "சௌந்தர்யா மற்றும் அவரது சகோதரர் அமர்நாத்தின் மரணத்துக்கு நடிகர் மோகன் பாபுதான் காரணம். ஹைதராபாத் ஷம்ஷாப்த்தின் ஜல்லே பள்ளியில் சௌந்தர்யாவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் நிலம் இருந்தது. அதனை விலைக்கு வாங்குவதற்காக மோகன் பாபு கேட்டார்.
கொலை செய்த மோகன் பாபு?: ஆனால் சௌந்தர்யாவின் சகோதரரான அமர்நாத் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மோகன் பாபு சௌந்தர்யாவையும், அமர்நாத்தையும் கொலை செய்து விமான விபத்து போல் சித்தரித்துவிட்டார். அவர்கள் இரண்டு பேரும் இறந்த பிறகு அந்த நிலத்தை மோகன் பாபு அபகரித்து விருந்தினர் மாளிகையை கட்டிவிட்டார். எனவே அந்த நிலத்தை அரசாங்கம் உடனடியாக கையகப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இதுவரை மோகன் பாபு எதையும் கூறவில்லை.
கணவரின் விளக்கம்: இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் இதுகுறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், "ஹைதராபாத்தில் நிலம் ஒன்றை தொடர்புப்படுத்தி கடந்த சில நாட்களாக மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா பற்றிய போலியான தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. எனது மறைந்த மனைவி சௌந்தர்யாவின் எந்த நிலத்தையும் மோகன் பாபு ஆக்கிரமிக்கவில்லை என்பதை தெளிவாக நான் உறுதிப்படுத்திக்கொள்கிறேன். இதுதொடர்பாக எந்தவொரு பரிவர்த்தனையும் எங்களுக்கிடையே நடைபெறவில்லை. எங்கள் குடும்பத்துக்கு மோகன் பாபு நல்ல நண்பர். இதுதொடர்பாக வரும் அனைத்து செய்திகளும் போலியானவை. எனது மனைவி மரணத்துக்கும் மோகன் பாபுவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதுபோன்ற வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











