Highest Paid Actress: இந்திய சினிமாவில் முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?
மும்பை: தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டில் கொடி கட்டி பறந்த இவர், கான் நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் பெற்று புருவம் உயர வைத்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி என்ற பெயர் கேட்டாலே பலருக்கும் வியப்புதான். அந்த பெயரில் ஒரு மந்திரம் இருப்பதாகவே பலரும் உணர்கின்றனர். சிவகாசியை சேர்ந்த தமிழ் பேசும் பெண், பாலிவுட்டை வசீகரப்படுத்தியவர். நடிப்புத் திறமையால் இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்: தமிழில் துணைவன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தலைமுறை கடந்தும் 50 ஆண்டுக்கும் மேலாக ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி.
ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை: இன்றைய சினிமா ஸ்டார்களை காட்டிலும் 90களிலேயே முதல் பான் இந்தியா ஸ்டார் நடிகை என்ற பெருமையை பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார். குறிப்பாக, நடிகைகளில் முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கியவர் ஸ்ரீதேவி. 1993ஆம் ஆண்டு வெளியான 'ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகை ஸ்ரீதேவி ரூ.1 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
ஸ்ரீதேவி வாங்கிய முதல் சம்பளம்: இவர், நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது, சினிமாவில தான் வாங்கிய முதல் சம்பளத்தையும் தெரிவித்திருந்தார். அதில், இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில் புதுமுக நடிகையாக நடித்த போது தனக்கு ரூ.5,000 சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
தனது முதல் படத்தில் ரூ.5000 சம்பளம் வாங்கிய நடிகை ஸ்ரீதேவி, தென்னிந்திய நடிகையாகவும், தமிழ் பெண்ணாகவும் பாலிவுட்டில் உச்சம் தொட்டு ரூ.1 கோடி சம்பளம் வாங்கியது பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
கான் நடிகர்களை விட அதிக சம்பளம்: பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான், அமீர் கான் போன்ற டாப் நடிகர்கள் 1992 -97 முதல் ரூ.50 லட்சம் வரை தான் சம்பளம் பெற்றுள்ளனர். நடிகர்களை காட்டிலும் ஒரு பெண் நடிகையாக உயர்ந்து, தன் நடிப்பால் அதிக சம்பளம் பெற்று நடிகர்களை புருவம் உயர வைத்துள்ளார்.
ரூ.1 கோடி சம்பளம் பெற்ற முதல் நடிகர்: நடிகை ஸ்ரீதேவி போன்றே தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் ஒரு படத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1992ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான 'ஆபத்பந்தவுடு' படத்திற்காக அவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றார். தென்னிந்தியாவை சேர்ந்த இருவரும் ரூ.1 கோடி சம்பளம் பெற்றிருப்பது நமக்கும் பெருமை தான்.


Click it and Unblock the Notifications











