சிவகார்த்திகேயன் மீது வருத்தப்பட்ட ஸ்ரீபிரியா.. கண் கலங்கிய ராதிகா.. தாய் கிழவி விழாவில் நெகிழ்ச்சி
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தாய் கிழவி படத்தில் ராதிகா லீடு ரோலில் நடித்திருக்கிறார். சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வரும் 27ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடந்தது. இதில் சரத்குமார், ஸ்ரீபிரியா, சூரி, இரா.சரவணன், நிரோஷா, ராதிகாவின் மகள், மகன் என பலர் கலந்துகொண்டார்கள்.
ஹீரோவாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் கலக்கிவரும் சிவகார்த்திகேயன் இப்போது தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். சிவக்குமார் முருகேசன் என்ற புதுமுகம் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இது தரமான ஹிட்டடிக்கும் என்றும்; ராதிகாவுக்கு நிச்சயம் விருதுகள் எல்லாம் குவியப்போகிறது எனவும் அடித்து கூறுகிறார்கள். மேலும் சில நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த கமல்ஹாசனும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்: சூழல் இப்படி இருக்க படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ஸ்ரீபிரியா பேசுகையில், "அனைவரும் படம் பார்த்துவிட்டு பேசினார்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை. ட்ரெய்லரை மட்டும்தான் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு நானே ராதிகாவுக்கு ஃபோன் செய்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறேன்; கூப்பிடுங்கள் என சொன்னேன். சிவகார்த்திகேயனை எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவரும் என்னை அழைக்கவில்லை. ஒருவர்கூட என்னை அழைக்கவில்லை. சில நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் நாம் வந்தால் நமக்கு புகழ் கிடைக்கும். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கிறேன்.
ராதிகா என் பொம்மை: என் ராதிகாவை பற்றி புகழ்ந்து பேசுவதை நான்தான் கேட்க வேண்டும். தாய் கிழவி ட்ரெய்லரில் ஒரு ஷாட்டில் ராதிகாவின் நடிப்பு அப்படியே அவரது அப்பா மாதிரியே இருந்தது. நான், ராதிகா எல்லாம் ஒரே காம்பவுண்டில் வளர்ந்தேன். அப்போது நான் கொஞ்சம் பெரிய பாப்பா. ராதிகா ரொம்ப ரொம்ப சின்ன பாப்பா. எப்போதும் எனது இடுப்பில் நான் அவரை தூக்கி வைத்திருப்பேன். அவர் எனக்கு ஒரு பொம்மை மாதிரி. அப்படித்தான் நான் நினைத்திருந்தேன். திடீரென அவர்கள் வீடு காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டார்கள்.
மேட்டுப்பாளையத்தில் சந்திப்பு: பிறகு காலத்தின் கொடுமையால் நான் நடிகையாகிவிட்டேன். மேட்டுப்பாளையத்தில் ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா வந்து எம்.ஆர்.ராதா மகள் நடிப்பதாக சொன்னார். உடனே நானும், எனது அம்மாவும் ராதிகாவா என ஆச்சரியத்தோடு கேட்டுவிட்டு ஷூட்டிங் ஸ்பாட் சென்று பார்த்தோம். எனது பொம்மை நன்றாகவே வளர்ந்திருந்தது. மீண்டும் என் பொம்மை கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சியடைந்தேன்.
உங்களை மதிக்கிறேன்: ராதிகாவுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்காததை நினைத்து எனக்கு வருத்தம் இல்லை பெரிய கோபமே இருக்கிறது. இப்போது இவரை மாதிரி நடிப்பதற்கு யார் இருக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் அவருக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்றுதான் சொல்வேன். அதை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கும், சிவக்குமார் முருகேசனுக்கும் நன்றி. நீங்கள் இரண்டு பேரும் (சிவகார்த்திகேயன், சிவக்குமார்) என்னைவிட வயதில் ரொம்ப ரொம்ப குறைவுதான். இருந்தாலும் உங்களை நான் ரொம்பவே மதிக்கிறேன். தனது வீட்டில் இருக்கும் பெண்களை மதிப்பவர்கள்தான் சினிமாவிலும் பெண்ணை வைத்து இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்" என்றார். ஸ்ரீபிரியா தன்னை பற்றி பேசப்பேச கீழே இருந்த ராதிகா கண்கள் கலங்கினார். அவர் பேசி முடித்ததும் மேடைக்கு வந்த ராதிகா ஸ்ரீபிரியாவை வாஞ்சையோடு கட்டியணைத்துக்கொண்டார். அப்போது ஸ்ரீபிரியாவும் கலங்கிவிட்டார். இது பார்ப்பவர்களை நெகிழ செய்தது.


Click it and Unblock the Notifications















