ஸ்ரீவித்யாவின் பணத்தை கணவரே திருடினார்.. அப்படியே இடிந்துவிட்டார்.. தோழி சொன்ன டாப் சீக்ரெட்
சென்னை: நடிகை ஸ்ரீவித்யா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகர் கமல் ஹாசனை காதலித்த அவர் பிறகு அந்த காதல் முறிந்ததால் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சுமூகமாக இல்லை. கடைசியாக அவர் புற்றுநோய் வந்து உயிரிழந்தார். இந்தச் சூழலில் அவரது திருமண வாழ்க்கை குறித்தும், முன்னாள் கணவர் ஜார்ஜ் குறித்தும் ஸ்ரீவித்யாவின் தோழி கொடுத்திருக்கும் பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஸ்ரீவித்யா கதாநாயகியாகவும் நடித்தார். அவர் கதாநாயகியாக நடித்தபோது கமல் ஹாசனை காதலித்தார். அதனை இரண்டு பேருமே பின் நாட்களில் ஒத்துக்கொண்டனர். ஆனால் இரண்டு பேரின் காதல் பாதியிலேயே முடிந்தது. அதற்கு ஸ்ரீவித்யாவின் தாய்தான் காரணம் என்று கூறப்படுகிறது. கமல் ஹாசனுடனான காதல் முறிவுக்கு பிறகு தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த அவர் தமிழில் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

திருமணம்: அதன்படி காதலுக்கு மரியாதை, ஆனந்தம், தளபதி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த அவர் தன்னுடைய கடைசி காலத்தில் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். இதற்கிடையே ஜார்ஜ் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் ஸ்ரீவித்யாவுக்கு நினைத்தபடி சுமூகமாக அமையவில்லை. கடைசியில் கேன்சர் வந்து இறந்துபோனார். இந்தச் சூழலில் அவரது தோழி ஷோபனா ரமேஷ் தனியார் யூட்யூப் சேனலுக்கு ஸ்ரீவித்யா குறித்து பேசியிருக்கிறார்.
ஷோபனா பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "ஸ்ரீவித்யாவை திருமணத்துக்கு முன்பு ஜார்ஜ் அவ்வளவு அழகாக பார்த்துக்கொண்டார். அவர் ஒரு பக்கா மலையாளி. நல்ல கட்டுமஸ்தான் உடல் அவருக்கு. நானும் ஸ்ரீவித்யாவும் திருவனந்தபுரத்துக்கு அடிக்கடி செல்வோம். அப்படித்தான் ஜார்ஜ் உடனான பழக்கம் அதிகரித்தது. ஒருகட்டத்தில் ஸ்ரீவித்யாவின் பணத்தை நிர்வகிக்கும் அளவுக்கு ஜார்ஜ் ஸ்ரீவித்யாவிடம் நெருக்கமானார்.
ஏமாற்று பேர்வழி: ஆனால் அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்று அப்போதே எனக்கு தெரியும். அனைத்தும் நன்றாக சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் திடீரென்று ஸ்ரீவித்யாவின் அக்கவுண்ட்டிலிருந்து அவர் செக் கொடுக்காமலேயே பணம் எடுத்தது தெரியவந்தது. அதையடுத்து வங்கியில் சென்று இதுகுறித்து கேட்டதற்கு, ஸ்ரீவித்யா கையெழுத்து போட்ட செக் வங்கியில்தான் இருப்பதாக பதில் வந்தது. அதனை கேட்ட ஸ்ரீவித்யா அப்படியே அப்செட்டாகி அங்கேயே உட்கார்ந்துவிட்டாள்.
வழக்குப்பதிவு: இதனை எதிர்பார்க்காத அவர், ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்தார். பிறகு திருவனந்தபுரத்திலிருந்து போயஸ் கார்டனுக்கு வந்துவிட்டார். அப்போதே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருந்தாலும் அந்தச் சமயத்தில் அவருக்கு கேன்சர் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அப்படிப்பட்ட சமயத்தில் தனது உடல் எடையை குறைப்பதற்கு ஸ்ரீவித்யா முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
கேன்சர் உறுதி: அதற்கான சிகிச்சையும் போய்க்கொண்டிருந்தது. இதற்கிடையே வந்த சில உடல்நலக்குறைவுகள் அவரது கன்னங்களை ஒடுங்க வைத்தன. அவளால் பாதி கண்களை மட்டுமே திறக்க முடிந்தது. பிறகு அவர் திருவனந்தபுரத்துக்கே சென்றுவிட்டார். அங்கு சென்ற சில நாட்களில் அவருக்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டது" என்றார். முன்னதாக கமல் ஹாசனும், ஸ்ரீவித்யாவும் தீவிரமாக காதலித்தார்கள் என்பதும்; அதனை இருவருமே ஒத்துக்கொண்டதும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











