Nooru Saami: ஆக்சிஜனே நீங்கதான்.. கேமரா முன்னாடி கதறி அழுத நூறு சாமி நடிகை!
சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ குடும்பக் கதைகள் வந்திருந்தாலும், இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஒட்டுமொத்த தியேட்டரையும் கண்ணீர் கடலாக்கி வருகிறது. குறிப்பாக, திரையரங்கிற்கு வரும் பெண் வாசகர்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு விம்மி விம்மி அழுது, படக்குழுவினரைக் கொண்டாடி வருகின்றனர். இதில் பிள்ளைகளுக்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்யும் இரண்டு ஆண் குழந்தைகளின் தாயாக நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் நடிகை ஸ்வாசிகா. இவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், நடிகை ஸ்வாசிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனக்கு வார்த்தைகளே வரல: என்னை இந்த அளவுக்குக் கொண்டாடும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றியைத் தவிர வேறு எதைச் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை, எனக்கு வார்த்தைகளே வரவில்லை. என் மேல் அளவுக்கு அதிகமான பாசத்தை நீங்கள் கொட்டி தீர்த்திருக்கிறீர்கள். ஏற்கனவே லப்பர் பந்து, மாமன் என நான் நடித்த எல்லாத் திரைப்படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவு சாதாரணமானது அல்ல. ஆனால், இந்த 'நூறு சாமி' படத்தில் எங்கேயோ கொண்டு போய் என்னை அமர வைத்துவிட்டீர்கள்.

ஆக்சிஜன் நீங்க தான்: இயக்குனர் சசி சார் எப்படி என் மேல் இவ்வளவு பெரிய நம்பிக்கையை வச்சு இந்த கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்தார், அதற்கு விஜய் ஆண்டனி சார் எப்படி ஒப்புக்கொண்டார் என்பது எல்லாமே எனக்கு இன்னமும் ஒரு கனவு போலத்தான் இருக்கிறது. நான் நடித்த ஒரு படம் இத்தனை தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுவதும், இவ்வளவு பேர் அதை ரசித்துப் பாராட்டுவதும் என் வாழ்நாளின் கனவு. அது இன்று நிஜமாகியிருக்கிறது. எந்தக் காலத்திற்கும் நான் தமிழ் ரசிகர்களுக்குக் கடமைப்பட்டிருப்பேன். என்னுடைய ஆக்சிஜனே இப்போ தமிழ் ஆடியன்ஸ் தான்.
நீங்க தான் ஹீரோ: இப்போ எனக்கு வர்ற போன் கால்கள், மெசேஜ்கள் எல்லாவற்றிலும் 'நூறு சாமி' படத்தின் உண்மையான ஹீரோ நீங்கதான் ஸ்வாசிகா என்று பலரும் பாராட்டுகிறார்கள். என் சினிமா கேரியரில் மட்டுமில்லை, என் ஒட்டுமொத்த வாழ்க்கையிலுமே இது மிக முக்கியமான ஒரு படம். அதைவிட இந்தச் சமுதாயத்திற்கு ரொம்ப ரொம்ப அவசியமான ஒரு படம் என கண்ணீர் மல்கத் தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். மாமன் திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ள ஸ்வாசிகாவின் இந்த எமோஷனல் வீடியோ, தற்போது இணையத்தில் லைக்குகளைக் குவித்து செம ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications