Tamannaah - 30 வயதில் அதற்கு நான் பிளான் செய்திருந்தேன்.. ஆனால் நடக்கவில்லை.. தமன்னா ஓபன் டாக்
மும்பை: Tamannaah (தமன்னா) நடிகை தமன்னா தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் விஜய் வர்மாவை காதலித்துவருகிறார்.
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததிருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
காவாலா தமன்னா: பாலிவுட்டில் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும்.
காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேருமே சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தனர். ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேசமயம் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தமன்னா வீட்டில் வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற பேச்சு ஓடுகிறது.
30 வயதில்: இந்நிலையில் தமன்னா தனது திருமணம் குறித்து பேசுகையில், “10 ஆண்டுகள் நடித்துவிட்டு 30 வயதில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது எனக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலும் நடித்துக்கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து படங்கள், வெப் சீரிஸ்களுக்கான வாய்ப்பு வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நடிப்பை விட முடியவில்லை.
திருமணம் என்பது பெரிய பொறுப்பு. அதற்கு நான் தயாராகிவிட்டதாக தெரியும்போது கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். எனவே எப்போது வேண்டுமானாலும் எனது திருமணம் நடக்கும்” என்றார்.


Click it and Unblock the Notifications











