விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை: நானா படேகர் மீது தனுஸ்ரீ போலீசில் புகார்
மும்பை: பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் தனுஸ்ரீ தத்தா.
2008ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா பேட்டி அளித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நானா படேகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார்
மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் நானா படேகர், டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக்கி மற்றும் இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார் தனுஸ்ரீ தத்தா. ஆனால் இது தொடர்பாக இன்னும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனுஸ்ரீ
தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி நானா படேகர் தனுஸ்ரீ தத்தாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கெல்லாம் பயந்து போய் ஓடிவிட மாட்டேன் என்ற தனுஸ்ரீ தற்போது நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் இன்று காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

நானா
தனுஸ்ரீயின் குற்றச்சாட்டு குறித்து நானா படேகரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். பொய் என்பது பொய் தான். இந்த விவகாரம் தொடர்பாக நான் விரைவில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன் என்றார்.

ஆதரவு
தனுஸ்ரீ தத்தா பொய் சொல்வதாக நானா படேகர் கூறி வருகிறார். அவரோ இது உண்மை என்றும், ஆதாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்ததற்கு ஆதாரம் இருப்பதாக டாப்ஸி கூட பேட்டில் ஒன்றில் கூறினார். தனுஸ்ரீ தத்தாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











