ரொம்ப யோசித்தேன்.. மனதளவில் தயாராக இல்லை.. திருமணம் குறித்து மனம் திறந்த டாப்சி
சென்னை: டாப்சி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி திரைப்படம் வெளியானது. சூழல் இப்படி இருக்க மத்யாஸ் போ என்பவரை டாப்சி காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் ரொம்பவே ரகசியமாக நடந்தது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது ஆடுகளம். அந்தப் படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. ஆடுகளம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையிலேயே வெளிப்படுத்தினார். அதனால் முதல் படத்திலேயே கோலிவுட்டின் கவனம் பெற்ற டாப்சிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

தமிழில் டாப்சி: ஆடுகளம் படத்துக்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் டாப்சிக்கு பட வாய்ப்புகள் தமிழில் பெரிதாக எதுவும் அமையவில்லை. இருப்பினும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து பேபி என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான அவருக்கு பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிங்க் படத்துக்கு பிறகு ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பயோபிக்கில் டாப்சி: அவரது ஹிந்தி கரியரில் பிங்க் படத்துக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது சபாஷ் மிது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தில் மிதாலி ராஜாக டாப்சி நடித்து பலரிடமும் அப்ளாஸை அள்ளினார். அவர் கடைசியாக டன்கி படத்தில் நடித்திருந்தார். ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
காதல்: இதற்கிடையே டாப்சி டென்மார்க்கை சேர்ந்த முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்துவந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக இரண்டு பேரும் காதலித்து வந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தங்களுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும்.
மனம் திறந்த டாப்சி: இந்நிலையில் தனது திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் டாப்சி. இதுகுறித்து அவர் பேசுகையில், "எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பகிர வேண்டுமா என நான் யோசித்தேன். அதனை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை. அதேநேரம் பொது விஷயமாக என்னுடைய திருமணத்தை மாற்றுவதற்கு விருப்பமும் இல்லை.
மனதளவில் தயாராக இல்லை: இதுகுறித்து அறிவிப்பதற்கும் மனதளவில் நான் தயாராக இல்லை. என்னுடைய சகோதரி சாகுன் பன்னுதான் எனது திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே எங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர். அதன் காரணமாக எனக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











