MR ராதா பொண்ணுகூட சொல்லவிடல.. நான் சந்தித்த அவமானம்.. ராதிகா பேச்சு!
சென்னை: ராதிகாவின் அசத்தலான லுக்கில் அவரது கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நகைச்சுவை பாணியில் உருவாகி உள்ள படம் 'தாய் கிழவி. இப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பேசிய ராதிகா சரத்குமார் தான் சினிமாவிற்கு வந்த போது சந்தித்த அவமானங்களை கூறியுள்ளார்.
அதில், இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்ன போது, நான் கிழவியாக நடிக்க முடியாது என்று சொன்னேன். அதன் பின் என் கணவர் இந்த கதையை கேட்டுவிட்டு என்னிடம் சொன்னார். அதன்பிறகு தான் இந்த படத்தில் நடித்தேன். இந்த படத்தில் நடிக்கும் போது தான் காலில் அடிபட்டு நடக்கமுடியாமல் போனது, இருந்தாலும் தயாரிப்பாளரை மனதில் வைத்துக்கொண்டு வலியோடு நடித்தேன். மேக்கப்போடுவதற்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகும். அப்போது தான் கமல் எப்படி பல கெட்டப்பில் நடித்தார் என்று நான் யோசித்தேன்.

ராதிகா சரத்குமார்: படத்தை பார்த்த கமலஹாசன், எப்படியாவது பாரதிராஜாவை அழைத்து வந்து, இந்த படத்தை பார்க்கவைத்துவிடு, இந்த படத்தை பார்த்தால் அவர் எழுந்து அமர்ந்து விடுவார் என்று சொன்னார். ஆனால், அவர் இப்போது மருத்துவமனையில் இருப்பதால், அவரால் படத்தை பார்க்க முடியாது. எனக்கும் அந்த வருத்தம் இருக்கிறது. ஏனென்றால் முதல் படத்தில், அந்த கிளி என்னுடையது என்ற வசனத்தை கையை தூக்கிக் கொண்டு நான் சொல்ல வேண்டும். ஆனால் நான், ஒன்று டயலாக்கை பேசுவேன், இல்லை கையை தூக்கமாட்டேன். இதனால், இரண்டையும் ஒரே நேரத்தில் என்னால் செய்ய முடியாது என அவரிடம் சொல்லி இருக்கிறேன். அப்படி, சொல்லிய நான், இன்று தாய் கிழவியாக நடித்து இருக்கிறேன்.
கலையரசி ராதிகா: இந்த படத்தில் கலையரசி ராதிகா என்று, என் பெயருக்கு முன்னால் பட்டத்தை போட்டு இருக்கேன். அந்த கலையரசி பட்டத்தை கொடுத்தது டாக்டர் கலைஞர். அவர் அவ்வளவு சீக்கிரமாக யாருக்கும் எந்த பட்டத்தையும் கொடுக்க மாட்டார் என என்னுடைய கணவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். அவர் கொடுத்த பட்டத்தை இந்த படத்தில் நான் பயன்படுத்தி இருக்கிறேன். எனக்கு எப்போதுமே பெயருக்கு முன்னால் பட்டத்தை போடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால், இந்த படத்தில் மிகவும் பெருமையாக கலையரசி என்ற பட்டத்தை நான் போட்டு இருக்கிறேன்.

எம்.ஆர்.ராதா மகள் டா: தொடர்ந்து பேசிய ராதிகா, இந்த படத்தை என்னுடைய தந்தை எம் ஆர் ராதாவிற்கு சமர்ப்பிக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்த புதிதில் என்னை பலரும் அவமானப்படுத்தினார்கள். என் தந்தையின் பெயரை சொல்ல விடாமல் என்னை நிறைய பேர் அவமானப்படுத்தினார்கள். அதிலிருந்து நான் எந்த படத்திலும் அப்பா பெயரை பயன்படுத்தவில்லை, வெறும் ராதிகா என்று தான் பயன்படுத்தினேன். என்னை பற்றி பேசிய பல விஷயத்தை நான் உதறி தள்ளிவிட்டு, எம்.ஆர். ராதாவின் மகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என நினைத்தேன். இன்று பெருமையாக, தேனாவட்டாக எம்ஆர் ராதாவின் மகள் என்பதை நிரூபித்து விட்டேன் என ராதிகா அந்த நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.


Click it and Unblock the Notifications











