அடேங்கப்பா 34 வயதில் இத்தனை கோடி சொத்தா?.. சைலெண்ட்டாக மிரட்டும் தளபதி 69 ஹீரோயின் பூஜா ஹெக்டே!
சென்னை: முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து கோலிவுட்டிலிருந்து ஒதுங்கிய அவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிஸியானார். சூழல் இப்படி இருக்க பீஸ்ட் படத்தில் நடித்து தமிழுக்கு மீண்டும் வந்தார். இப்போது விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் பூஜா ஹெக்டே. 2009ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று எலிமினேட் செய்யப்பட்ட இவர். இயக்குநர் மிஷ்கின் பார்வையில் பட்டார். அதனையடுத்து 2012ம் ஆண்டு ஜீவாவை வைத்து மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பூஜா ஹெக்டேவுக்கும் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

நடிகை பூஜா ஹெக்டே: நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த முதல் படம் சுமாரான வரவேற்பையே பெற்றாலும் அவருக்கு அங்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதுமட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் தனது என்ட்ரியை கொடுத்தார். ஆனால் அந்தப் படமும் ஓரளவுதான் வரவேற்பை பெற்றதன் காரணமாக அங்கும் வாய்ப்புகள் இல்லை. தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். தமிழும், ஹிந்தியும் பூஜாவை கைவிட்டாலும் தெலுங்கு அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.
பீஸ்ட் ரீ என்ட்ரி: அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக இருந்தார். அவர் தனக்கு அழகு மட்டுமில்லை திறமையும் இருக்கிறது என்பதை டோலிவுட்டில் நிரூபித்தார். சூழல் இப்படி இருக்க விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் பல வருடங்கள் கழித்து தமிழில் அவரை பார்த்த ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர்.
ஹிந்தியில் படு பிஸி: இதற்கிடையே ராதே ஷ்யாம் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியானது. அதனையடுத்து ஹிந்தியிலும் பிஸியாகியிருக்கிறார் பூஜா. அதன்படி அவர், ஹவுஸ்ஃபுல் 4, கிசி கா பாய் கிசி கி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் அவரது நடிப்பில் தேவா என்ற படம் ஹிந்தியில் வெளியாகவிருக்கிறது. அது மட்டுமின்றி மேலும் சில ஹிந்தி படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரலாம் என்று தெரிகிறது.
தமிழில் வளர்ச்சி: தமிழிலும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. அதன்படி சூர்யாவின் 44வது படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்திலும் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சொத்து மதிப்பு: அதன்படி 34 வயதாகும் பூஜா ஹெக்டேவுக்கு மொத்தம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு 5 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறாராம். மேலும் மும்பையில் ஆறு கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட பங்களா இருப்பதாகவும்; சொந்தமாக இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் Porsche, 60 லட்சம் ரூபாயில் ஜாகுவார், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் Audi Q7 ஆகிய சொகுசு கார்களை வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் 34 வயதில் பூஜாவுக்கு இவ்வளவு சொத்தா என்று ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











